நடிகை தமன்னா நடிக்கும் தமிழ் பேய் படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நடிகைகளாக தமிழ்த் திரையுலகில் கோலோச்சி வரும் நடிகைகளான நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர்களில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோர் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்கள். நடித்தும் வருகிறார்கள். இந்நிலையில் நடிகை தமன்னா முதன்முதலாக கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் தெரிவிக்கையில்,

“ ஃபேமிலி எண்டர்டெயின்ர் மற்றும் ஹாரர் கொமடி திரில்லராக தயாராகும் இந்தப் படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அனந்தோ ப்ரம்ஹா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். இந்த படத்தின் டைட்டிலில் ஒளி அல்லது வெளிச்சம் இடம்பெற வேண்டும் என்றும். வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்த்தேன். அதனால்தான் ‘பெட்ரோமாக்ஸ்’ என்ற பெயரை தெரிவு செய்தோம். இந்த படத்தின் திரைக்கதை வீட்டுக்குள்ளேயே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் அந்த வீட்டின் உரிமையாளரின் மகளாக தமன்னா நடிக்கிறார். இவருடன் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன் ஆகியோர் நடிக்கிறார்கள்.” என்றார்.

இந்த படத்தின் டைட்டிலை முன்னணி நடிகையான தாப்ஸி, தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பதும், இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இதற்கு முன் ‘அதே கண்கள்’ என்ற படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.