சிம்பாப்வே அணியை சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநிறுத்தும் ஐசிசியின் அறிவிப்பு காரணமாக முற்றாக மனமுடைந்து போயுள்ளதாக அந்த அணியின் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் முற்றாக மனமுடைந்துபோயுள்ளோம் என தெரிவித்துள்ள சிம்பாப்வே அணியின் சகலதுறை வீரர் சிக்கந்தர் ராஜா எங்கள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை எவ்வாறு இப்படி முடிவிற்கு வரமுடியும் என்பது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசியின் இந்த அறிவிப்பு ஒரிரு வீரர்களிற்கு மாத்திரம் அதிர்ச்சியளிக்கவில்லை முழு சிம்பாப்வேயிற்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் இதனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனது அணியின் ஏனைய வீரர்களும் எனது மனோநிலையிலேயே உள்ளனர் என நான் கருதுகின்றேன் என சிக்கந்தர் ராஜா தெரிவித்துள்ளார்.

நாங்கள் இங்கிருந்து எதனை நோக்கி செல்லப்போகின்றோம் இதற்கு ஒரு முடிவுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐசிசி எங்களை இடைநிறுத்தியுள்ளது என மாத்திரம் தெரிவித்துள்ளனர் எத்தனை வருடங்களிற்கு என எவரும் தெரிவிக்கவில்லை  இரண்டு வருடங்களிற்கு இந்த தடை நீடித்தால் பலரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பாப்வே வீரர்கள் கிரிக்கெட்டை கைவிட்டுவிட்டு வேறு வேலைகளிற்கு விண்ணப்பிக்கவேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கள் கிரிக்கெட்டையும் எங்கள் வாழ்வாதாரத்தையும் எங்களிடமிருந்து பறித்து விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.