சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் 24 படத்தின் ஒரு காட்சியில் டோணியுடன் சூர்யா செல்பி எடுப்பதை கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு காட்சியை படக்குழுவினர் அமைத்திருப்பது டோணி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் '24'. 

'யாவரும் நலம்' புகழ் விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. 

இன்று வெளியாகியிருக்கும் '24' திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக ஆத்ரேயா என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக சூர்யா மிரட்டியிருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடித்திருப்பதாக செய்திகள் வெளியானது. 

இதனால் அவர் யாராக இருப்பார் என ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் அந்த வீரர் யார்? என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட்  அணித் தலைவர்  மகேந்திர சிங் டோணி தான் அந்த கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் மைதானத்தில் டோணியுடன், சூர்யா செல்பி கிளிக்குவது போல கிராபிக்ஸ் உதவியுடன் ஒரு காட்சியை படக்குழு அமைத்துள்ளது. 

இப்படத்தில் டைம் மெஷின் தவிர 'ப்ரீஸ் டைம்' (உறைந்து போதல்) என்ற கருப்பொருளை வைத்தும், விக்ரம் குமார் காட்சிகள் அமைத்திருக்கிறார். 

அதில் ஒரு காட்சிதான் டோணியுடன் சூர்யா செல்பி எடுப்பது. டோணி உண்மையில் நடிக்கவில்லை என்றாலும், இந்தக் கிராபிக்ஸ் காட்சி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.