( மயூரன் ) 

தெற்கில் சிங்கள மாணவ மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கி விட்டார்கள். விரைவில் தமிழ் தெரிந்த சிங்கள அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். கல்வி வலயத்தினால் இன்று வெள்ளிக்கிழமை யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட  “ஆசிரியர் மாநாடு – 2016” இல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்விப் புலத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் விளங்கிய யாழ்ப்பாணம் இப்போது அதன் தரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் எம் மாணவ, மாணவ மாணவியரை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை எம் அனைவருக்கும் விசேடமாக ஆசிரியர்களுக்கு உண்டு என்பதை மனதில் இருத்தி எமது கடமைகளை முன்னெடுத்துச் செல்லல் அவசியமாகும்.

கற்றவர்களும் சமயப்பற்றுடையவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் கடமை வீரர்களும் விளைந்த இப் பூமியில் இன்று கல்விக்கு பஞ்சம், சமயத்துக்குப் பஞ்சம், கலையில் வஞ்சம், கடமையிலட வஞ்சம். 

சுயநலத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம். எமது இளைய சமுதாயம் தான்தோன்றித்தனமாக நினைத்த நினைத்த மாத்திரத்தில் மிகப் பாரிய குற்றச் செயல்களில், பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுகின்றார்கள். மிகப் புகழ் பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற திறமை மிக்க பல மாணவர்கள் கூட இன்று பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை நாம் பத்திரிகைகள் வாயிலாகவும் நேரடியாகவும் அறிந்தும் கேள்விப்பட்ட வண்ணமும் உள்ளோம். 

நல்ல குடும்பங்களில் பிறந்த மாணவ, மாணவியர் கூட இவ்வாறான பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு மூலகாரணம் என்ன என்ற கேள்வி எம்முன் பூதாகாரமாக எழுந்து நிற்கின்றது.

படித்த பண்பாடான குடும்பங்களில் பிறந்த மாணவ மாணவியரே இவ்வாறான குற்றச்செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர் என்று கூறக் கேட்கின்றோம்.

கல்லூரி மாணவியர்க்குக் குற்றச் செயல்களுடன் தொடர்புண்டு என்கின்றது சிலசெய்திகள். காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்கையில் இந்த அவசர உலகத்தில் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப்பெறாத பல மாணவச் செல்வங்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பொதுவான கருத்தாக காணப்படுகின்றது.

ஆசிரியர்களே, உங்களிடமும் ஒரு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்கள் பாடசாலைக்கு அல்லது கல்லூரிக்கு தினமும் கற்க வரும் மாணவ மாணவியர் அன்பு தேடலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயத்தை மனதில் இருத்தி அவர்களை அன்புடன் அரவணைத்து, விசேடமாக ஆரம்ப வகுப்பு பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் போன்று அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான கல்வியைப் புகட்டுகின்ற போது அப்பிள்ளைகள் உங்கள் மீது அளவு கடந்த மதிப்பும் பாசமும் உடையவர்களாகவும் விருப்புடன் கல்வி பயில்பவர்களாகவும் காணப்படுவர். 

தண்டனைகளால் மட்டும் மாணவ மாணவியரைத் திருத்திவிடலாம் என்ற கருத்துபிழையானது என்றே எண்ணுகின்றேன். பிள்ளைகளைத் தண்டிப்பதை விட அவர்கள் மீது அன்பு செலுத்துவதன் மூலம் அவர்களின் உள்ளங்களை வென்று நடப்பதன் மூலம் கல்வியின்பால் அவர்கள் கூடிய சிரத்தை எடுக்க வைக்க முடியும்.

மாணவ சமுதாயத்தை, ஒரு கற்ற, பண்பட்ட சமூகமாக மாற்றவேண்டிய பாரிய பொறுப்பு உங்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இன்று எமது மாணவ மாணவியர், ஏன் அலுவலர்கள் கூட, பிழையின்றி ஆங்கிலத்தை எழுதமுடியாத நிலையில் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது. ஆகவே எமது ஆசிரிய சமூகமும் மாணவ சமூகமும் மும்மொழித் தேர்ச்சி பெற வேண்டும். 

இப்போது எமது மாணவ மாணவியர் ஆங்கிலப்புலமை மிக்கவர்களாகவும், சிங்கள மொழித் தேர்ச்சி பெற்றவர்களாகவும் கண்டதையும் கற்கக்கூடிய ஆற்றலை உடையவர்களாகவும் வாசிப்புப் பழக்கத்தை கைக்கொள்பவர்களாகவும் மாற்றப்படவேண்டும். தெற்கில் சிங்கள மாணவ மாணவியர் தமிழ் படிக்கத் தொடங்கி விட்டார்கள். விரைவில் தமிழ் தெரிந்த சிங்கள அலுவலர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் தமிழில் மட்டும் பாண்டித்தியம் பெற்றிருந்தால் என்னாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் கல்வியில் முதலிடம் வகித்தது. மீண்டும் 2009ற்கு பின்னர் படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்ற போதும் இன்னும் முழுமையான நிலையை அடையவில்லை.

அண்மைக்காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை வேதனையைத் தருவதாக அமைகின்றது. யுத்த காலத்தில் கூட ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடித்த இந்த சமூகம், யுத்தம் முடிவுற்று சமாதான நிலை தோன்றிய பின்னர் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையில் நாட்டம் கொண்டிருப்பது மனவேதனையைத் தருகின்றது. 

வேண்டுமென்றே தமிழ் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி, கலாச்சாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவை அமைந்துள்ளனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

எம்மைச் சுற்றி ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலிஸார் என காவற் படைகள் தரித்து நிற்கின்றன. 

அப்படியிருந்தும் பல்லாயிரம் கிலோக்கள் கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் மூலமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம். அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்? எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில்,பாடசாலைகளை நோக்கியதாக இப் போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம். 

எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும் எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகி ஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப் பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும்.

இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீதிபதிகள் இறுக்கமான கட்டளைகளைப் பிறப்பித்து கடுமையான முயற்சிகனை மேற்கொண்டிருக்கும் அதேநேரம் அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை அதிபர்கள், மேலும் பெற்றோர்கள் எனப் பலரும் இவை பற்றிய மக்கள் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பது முக்கியம்.

தொழில் அதிபர்கள் தென்பகுதியில் இருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துகின்றார்கள். கேட்டால் அனுபவமுடைய திறன் படைத்த தொழிலாளர்கள் உங்களிடம் இல்லை என்கின்றார்கள்.

 கனரக வாகனங்களுக்கு எம்மிடம் சாரதிகள் இல்லை. தென் பகுதியில் இது போன்ற கனரக வாகனங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்குகின்ற பல பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு சாரதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. 

வடபகுதியில் உள்ள சாரதிகள் இப்பயிற்சியைப் பெற விரும்பினால் வடமத்திய மாகாணத்திற்குப் போக வேண்டும். வடபகுதியில், ஏன் கொழும்பில் கூட, எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இது போன்ற ஒரு பயிற்சி நிலையத்தை உருவாக்குவதற்கு யாரும் முன்வருவது இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.