யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை.