முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரியாகிய அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கின்றது  

Image result for மகசீன் சிறைச்சாலை

மகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத அரசியல் கைதி ஒருவரின் உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. 

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய நெல்லியடியைச் சேர்ந்த அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.  அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழமை அதிகாலை முதல் இவர் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. 

இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர், தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக நீதி அமைச்சின் அதிகாரம் வாய்ந்த அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி கடிதங்கள் எழுதியிருந்த போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் கைதிகளின் கடிதங்களை அனுப்புவது சிறைச்சாலை அதிகாரிகளின் வேலையல்ல எனக் கூறியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படியும், மேன் முறையீட்டு வழக்கில் பார்த்துக் கொள்ளும்படியும் உண்ணாவிரதம் இருக்கின்ற தேவதாசனை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அது தனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்து, அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லையென்று தெரியவருகின்றது.

ஆயினும் அதற்கு இணங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அவரை, சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளைத் தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறைக்கூட்டில் திங்கட்கிழமை மாலை அடைத்திருந்தார்கள். 

சாகும் வரையில் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டோடு, நீரும் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரைத் தண்டிப்பதற்காகத் தனி சிறைக்கூட்டில் அடைப்பது சரியானதல்ல. அதற்கு எதிராகத் தாங்கள் அனைவரும் புதன்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, மகசின் சிறைச்சாலையின் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் தேவதாசனை தனிச் சிறைக்கூட்டில் இருந்து முன்னர் அவர் இருந்த சிறைச்சாலை இடத்திற்கு மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இருப்பினும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. ஆதனால் அவருடைய உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேவதாசனைப் பார்வையிடுவதற்காக மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை அரசியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்கு முதலில் சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்திருந்தனர். 

சிறைச்சாலை அலுவலகத்தில் வந்து பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனைச் சந்திக்குமாறு உண்ணாவிரதம் இருந்து வரும் தேவதாசனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆயினும் தனது உடல் நிலை மோசமடைந்திருப்பதனால் மாடிப்படியேறி அங்கு சென்று பாராளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க முடியாதுள்ளது என அவர் தெரிவித்ததையடுத்தே சிறைக்கைதிகள் உள்ள இடத்திற்குச் செல்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தன்னைச் சந்தித்த வியாழேந்திரனிடம் தனது நிலைப்பாட்டையும் கோரிக்கைகளையும் தெளிவாக எடுத்துக் கூறிய தேவதாசன் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.