பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு உதவி செய்ததாகக் கூறி இளம்பெண்ணொருவரை உயிருடன் எரித்துக் கொன்ற 15 பேரை பாக்கிஸ்தான் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பாகிஸ்தானில் கைபர்- பக்துன்கவா மாகாணத்திலுள்ள அபோதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளம் பெண் அம்பிரீன். இவரது பக்கத்து வீட்டு தோழி சைமா.

சைமா இளைஞர் ஒருவரை காதலித்தாள். இதற்கு அவளது பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அவர்களுடைய காதலுக்கு அம்பிரீன் உதவி செய்தாள்.

இதற்கிடையே காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த விவகாரம் ‘ஜிர்கா’ எனப்படும் மலைவாழ் பஞ்சாயத்து குழுவுக்கு சென்றது. 

குறித்த பஞ்சாயத்தில் இடம் பெற்ற 15 பேர்  காதல் விவகாரம் குறித்து விசாரித்தனர்.  விசாரணையில் காதல் ஜோடி திருமணத்துக்கு அம்பிரீன் உதவி செய்தது தெரியவந்தது. உடனே அவளை இழுத்து வந்து அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அவளது கழுத்தை நெரித்து மூச்சுத் திணறடித்தனர்.

பின்னர் அவளுக்கு விஷ ஊசி ஏற்றி, அம்பிரீனை ஜீப்பில் கட்டி வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்றனர்.

இக்கொடூர சம்பவத்தை கூடி நின்று பார்த்து ரசித்தனர். இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் இளம்பெண் அம்பிரீனை உயிருடன் எரித்துக் கொன்ற மலைவாழ் பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் 15 பேரையும் கைது செய்தனர். 

அவர்கள் அனைவரும் அபோதாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.