உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில்  2008 ஆம் ஆண்டு முதல் உலகின் முதலாவது பணக்காரராக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்த மைக்ரோசொப்ட்டின் தலைவர்  பில் கேட்ஸ் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டுக்கு, பிறகு, அலிபாபா, அமேசன் போன்ற பல புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, மைக்ரோசொப்டை பின்னுக்குத் தள்ளத் தொடங்கியன. அப்படி தொடங்கப்பட்ட அமேசன் நிறுவனத்தின் தலைவர் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பில் கேட்ஸ் கடந்த சில ஆண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரர் என்கிற தன் சிம்மாசனத்தை, அமேசன் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் போன்ற புதியவர்களுக்கு கொடுத்துவிட்டு இரண்டாம் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்ட்  இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசொப்ட் தலைவர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.

இதன்படி, தற்போது ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2 ஆம் இடத்திலும், 107 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3 ஆம் இடத்திலும் உள்ளனர்.

பில்கேட்ஸ் தமது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டொலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே பல ஆண்டு காலமாக முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.