யாசகம் இல்லாத தலைநகரம் சாத்தியமா?

Published By: Daya

18 Jul, 2019 | 12:36 PM
image

 "உற­வு­க­ளுக்­காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இன்று முக­வ­ரி­யற்­ற­வ­னாக யாசகம் செய்­கிறேன்." என்று கொழும்பு புறக்­கோட்­டையில் யாசகம் கேட்கும் கண்­ணையா என்று பெயர் சொல்லும் முதி­யவர் தனது உளக்­கு­மு­றலை கொட்­டித்­தீர்த்தார். (பெயர், இடம் மாற்­றப்­பட்­டுள்­ளது.)

அம்­பாறைப் பகு­தியைச் சேர்ந்த முதி­யவர் ஒரு­வரே இவ்­வாறு தன் சோகங்­க­ளையும், வாழ்வில் சந்­தித்த ஏமாற்­றங்­க­ளையும் கண்­ணீ­ருடன் சொல்லிச் சென்றார். இவரைப் போன்றே எம்மில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தந்­தை­யர்­களும், தாய்­மார்­களும், சகோ­தர, சகோ­த­ரி­களும் தெருவில் கைவி­டப்­பட்ட நிலையில் யாச­கர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 

பெரும்­பா­லான நாடு­களில் யாசகம் என்­பது பர­வ­லா­கவே காணப்­ப­டு­கின்­றது. அதிலும் இலங்­கையில் யாசகம் என்­பது தவிர்க்க முடி­யா­த­வொன்­றா­கி­விட்­டது. ஆசிய நாடு­களின் பட்­டி­யலில் சுற்­று­லாத்­து­றைக்கு பெயர் பெற்ற  நாடாக விளங்கும் எமது நாட்டில் நக­ரப்­ப­கு­தி­களில் யாச­கர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து காணப்­ப­டு­வது துர­திஷ்­டமே.

எந்த முத­லீடும் இல்­லாமல் இல­கு­வாக பணம் சம்­பா­திக்கும் ஒரு வழி­மு­றை­யாக இந்த யாசகம் விளங்­கு­வ­தாலோ என்­னவோ நாளுக்கு நாள் யாச­கர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கின்­றது என்றும் எண்ணத் தோன்­று­கி­றது. 

நாட்டின் சகல நக­ரங்­க­ளிலும் யாச­கர்கள் பர­வ­லாக காணப்­ப­டு­கின்­ற­போ­திலும்  தலை­நகர் கொழும்­பி­லேயே அதிக எண்­ணிக்­கை­யி­லானோர் யாசகம் செய்­கின்­றனர். இவர்கள் தெரு­வோ­ரங்­க­ளிலும், பஸ், புகை­யி­ரத தரிப்­பி­டங்­க­ளிலும் தமது அன்­றாட வாழ்வை பல்­வேறு போராட்­டங்­க­ளுக்கு மத்­தியில் கழித்து வரு­கின்­றனர். 

இவர்­களில் பெரும்­பா­லானோர் வயது முதிர்ந்­த­வர்­க­ளா­கவும் தமது உற­வு­களால் கைவி­டப்­பட்­ட­வர்­க­ளா­கவும் காணப்­படும் அதே­வேளை தனக்­கான வாழ்­வா­தா­ரத்தை தேடிக்­கொள்­வ­தற்­காக கூலி வேலை­க­ளுக்கு செல்ல கூட  உடல் அள­விலும் உள அள­விலும் இய­லா­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். 

அதே­நேரம் தனிப்­பட்ட வாழ்க்கை பிரச்­சி­னை­களால் உற­வு­களை பிரிந்து ஆத­ர­வற்­ற­வர்­க­ளாக வீதிக்கு வந்த பலர் இறு­தியில் யாசகம் என்­பதை தமக்­கு­ரிய போர்­வை­யாக கொண்டு அத­னையே தொழி­லாக செய்து வரு­கின்­றனர். இன்­னொரு தரப்­பினர் போதை வஸ்­துக்கு அடி­மை­யா­ன­தாலும் மற்­றொரு தரப்­பினர் குடும்ப பொறுப்­பின்­மை­யாலும் புகை­யி­ர­தங்­க­ளிலும், பேருந்து வண்­டி­க­ளிலும், சன நெருக்­கடி அதி­க­மா­க­வுள்ள இடங்­க­ளிலும் யாசகம் செய்­கின்­றனர். 

அதிலும் சிலர் தமது திற­மை­களைக் காட்டி அதா­வது பாட்டு பாடு­வது, மெஜிக் என்ற பெயரில் ஏதேனும் சாக­சங்கள் செய்­வதன் ஊடாக பணம் சம்­பா­திக்­கின்­றனர். இவர்­க­ளது இத்­த­கைய செயற்­பா­டுகள் பெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­களில் பய­ணி­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடை­யூ­றா­கவே காணப்­ப­டு­கின்­றன.இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்தும் சிலர் புகை­யி­ரத நிலையம், பஸ்­த­ரிப்­பிடம்  என மக்கள் அதிகம் வந்­து­போகும் இடங்­களைத் தேர்ந்­தெ­டுத்து உட­மை­க­ளையும் நகைகள் பணம் உள்­ளிட்ட பெறு­மதி வாய்ந்த பொருள்­க­ளையும் கொள்­ளை­ய­டிக்கும் சம்­ப­வங்கள் அன்­றாடம் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. 

இவர்­க­ளுக்கு அப்பால் இன்­னு­மொரு தரப்­பினர் குழந்­தை­களை கையில் ஏந்தி பொது­மக்­க­ளிடம் சிகிச்சை மேற்­கொள்ள வேண்டும் என்­கின்­றனர்.  இல்­லையேல் தனக்கு ஏதேனும் சத்­திர சிகிச்சை செய்ய வேண்­டு­மெனக் கூறி ஆயிரக்கணக்கில் யாசகம் செய்­கின்­றனர். 

பொது­மக்­களும் மனி­தா­பி­மானம் என்ற ரீதியில் தங்­களால் இயன்ற உத­வி­களை செய்து வரு­கின்­றனர். ஆனால் சமீ­ப­கா­ல­மாக யாசகம் என்­பது ஒரு­வகைக் கலை­யாக மாறி­வரும் தொழில் என பர­வ­லாக கூறப்­ப­டு­கின்­றது. அதா­வது போலி­யான கார­ணங்­களைக் காட்டி பொது இடங்­களில் இவ்­வாறு யாசகம் அதி­க­ரித்து வரு­வதே இதற்கு கார­ண­மாகும். 

இதனால் உண்­மை­யா­கவே உற­வு­களால் கைவி­டப்­பட்டு, உடல் அளவில் ஊன­முற்­ற­வர்கள் பொது­மக்­களால் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றனர். இத்­த­கைய போலி­யான கார­ணங்­களைக் காட்டி யாசகம் என்­பதை தொழி­லாக கொண்டு வாழ்க்கை நடத்­து­ப­வர்­க­ளது பின்­பு­லத்தை அவ­தா­னித்தால் பெரும்­பா­லா­ன­வர்கள் போதை வஸ்­துக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளா­கவே உள்­ளனர். ஒரு­சிலர் இல­கு­வான முறையில் பணம் சம்­பா­திக்கும் வழி என்­பதால் இதனை ஒரு தொழி­லா­கவே செய்து வரு­கின்­ற­னர். 

யாசகம் செய்­வதை தொழி­லாகக் கொண்­டுள்ள சிலர் யாச­கத்தின் ஊடாக கிடைக்கப் பெறும் இந்த வரு­மா­னத்தால் வீடு, காணி என அசையா சொத்­துக்­க­ளுக்கு உட­மை­யா­ளர்­க­ளா­கின்­றனர். அண்­மையில் நீர்­கொ­ழும்பில் கைது செய்­யப்­பட்ட கண்­களை இழந்த யாசகர் ஒருவர் பல ஆண்டு கால­மாக யாசகம் செய்து சம்­பா­தித்த பணத்தைக் கொண்டு தனது இரு பெண் பிள்­ளை­க­ளுக்கும் வீடு, காணி என அசையா சொத்­துக்­களை சேர்த்­து­வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­போன்று ஆத­ர­வற்ற அல்­லது தமது குழந்­தை­க­ளையே வாக­னங்­களில் வைத்துக் கொண்டு போலி­யான வைத்­திய சான்­றி­தழ்­களை தயா­ரித்து சத்­திர சிகிச்சை மேற்­கொள்ள வேண்டும் என தெரி­வித்து பணம் சம்­பா­திக்­கின்­றனர். இதற்கு அண்­மையில் மலை­ய­கத்தில் இடம்­பெற்ற கைது சம்­பவம் நல்ல உதா­ர­ண­மாகும். அதே­போன்று திரு­கோ­ண­ம­லையில் யாசகம் கொடுத்த தம்­ப­தி­களை தாக்கி அவர்­க­ளி­ட­மி­ருந்த உட­மை­களை யாசகர் ஒருவர் கொள்­ளை­யிட்ட சம்­ப­வமும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. 

வாழ வழி­யின்றி தற்­கொ­லையை முடி­வாகத் தேடிக் கொள்­ளாமல் யாசகம் பெற்­றேனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என நினைப்­பது பாதிக்­கப்­பட்­ட­வர்­களைப் பொறுத்­த­மட்டில் நியா­ய­மா­ன­தாக பார்க்­கப்­பட்­டாலும்  போலி­யான கார­ணங்­களைக் கூறி மக்­களை ஏமாற்றி யாச­கத்­தையே பிரா­தன தொழி­லாக கொண்டு மக்­களை ஏமாற்­று­ப­வர்கள் பொது­மக்கள் மத்­தியில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இல்­லையேல் இத்­த­கை­யோ­ருக்கு எதி­ராக அர­சாங்கம் ஏதேனும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

காலாகா­ல­மாக ஆட்­சிக்கு வரும் தலை­மைகள் மக்கள் மத்­தியில் பல்­வேறு வாக்­கு­களைக் கூறி ஆட்­சிக்கு வரு­வதும் பின்னர் பல்­வேறு கார­ணங்­களைக் கூறி கொடுத்த வாக்­கு­களை காப்­பற்ற காலம் தாழ்த்­து­வதும் வேடிக்­கை­யான விட­ய­மா­யிற்று. 

அந்த வகையில், கடந்த உள்­ளூ­ராட்­சி­சபைத் தேர்தல் சம­யத்­தின்­போது தற்­போ­தைய கொழும்பு மாந­க­ர­சபை மேயர் றோசி சேனா­நா­யக்க  கொழும்பு மாந­கரில் யாச­கத்தை இல்­லா­தொ­ழித்து புதிய அழ­கிய நகரை உரு­வாக்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார். மேலும் யாச­கர்­க­ளுக்­கான தீர்வு திட்­ட­மாக கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர் உள்­ளூராட்சி தேர்­தலை முன்­னிட்டு தற்­போ­தைய கொழும்பு மாந­கர மேயர் றோசி சேனா­நா­யக்க ஒரு விட­யத்தை முன்­வைத்­தி­ருந்தார். அதா­வது  தன்­னு­டைய தேர்தல் வெற்­றியின் பின்னர். தலை­நகர் வாழ் யாச­கர்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கும் வாழ்க்கை தரத்­திற்­கு­மான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும். குறிப்­பாக கைவி­டப்­பட்ட யா­சகர்­களை ஒன்­று­தி­ரட்டி அவர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­படும். அவ்­வாறு சேர்க்­கப்­படும் யாச­கர்­களில் தொழி­லுக்கு செல்லக் கூடி­ய­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­களை வழங்கி அவர்­க­ளுக்கு புது­வாழ்வு அளிக்­கப்­படும்" எனவும் தெரி­வித்­தி­ருந்தார். 

அதே­போன்று கடந்த ஆண்டு அமைச்­சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, யாச­கர்­க­ளுக்­கான வேலைத்­திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். இதில் கொழும்பில் யாசகம் பெறுவோர் கொழும்பு மாந­கர சபையின்  ஆணை­யா­ளரை சந்­திக்கவேண்டும் எனவும் அதன்­பின்னர் பதிவு செய்­யப்­பட்ட யாச­கர்கள் அனை­வரும் புன­ருத்­தா­பன நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவர் எனவும் தெரி­வித்­தி­ருந்தார். மேலும் வர்த்­தக ரீதியில் யாசகம் பெறு­வோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் உண்­மை­யா­கவே யாசகம் பெறும் நிலைக்கு தள்­ளப்­பட்­டோ­ருக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு அவ்­வப்­போது நல்­ல­பல திட்­டங்­களை முன்­வைக்­கின்­ற­போ­திலும் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தாமை கவ­லை­ய­ளிக்­கி­றது.

ஒரு பிரச்­சி­னையை அடை­யாளம் கண்ட பின்னர் அதனைத் தீர்ப்­ப­தற்­கான நல்ல திட்­டங்­களை முன்­மொ­ழிந்து முறை­யாக வகுத்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்.  இல்­லையேல் ஆறிய கஞ்சி பழங்­கஞ்சி என்ற கதை­யா­கி­விடும். எமது நாடு பல்­லின மக்கள் வாழும் இயற்கை வளங்கள் நிறைந்த அழ­கிய நாடு என்­பதால் உலக நாடு­களின் கவ­னத்­தையும் தன் பக்கம் ஈர்க்க வைத்­துள்­ளது. இந்­நி­லையில் சுற்­று­லாத்­து­றை­யினர் அதிகம் வந்து செல்லக் கூடிய கொழும்பு போன்ற நகர்­ப்பு­றங்­களில் இவ்­வாறு யாச­கர்கள் வகை தொகை­யின்றி பெரு­கி­யி­ருப்­பது நாட்டின் வளர்ச்­சிக்கும் எதிர்­கால அபி­வி­ருத்­திக்கும் மிகப்­பெ­ரிய தடை­யாக அமையும். 

நாட்டு மக்­க­ளுக்கு நிறை­வேற்ற வேண்­டிய, தீர்த்து வைக்க வேண்­டிய பல்­வேறு விட­யங்கள் குவிந்து கிடக்­கின்ற நிலையில் யாச­கர்­களின் வாழ்­வா­தாரம் குறித்து சிந்­திப்­ப­தென்­பது சாத்­தி­யப்­ப­டுமா என பலரும் சிந்­திக்கக் கூடும். 

அண்­மைக்­கா­ல­மாக அர­சி­ய­லிலும் பொரு­ளா­தா­ரத்­திலும் ஏற்­பட்­டுள்ள தளர்வு நிலை­யி­லி­ருந்து நாடு இன்­னமும் மீள முடி­யாமல் தத்­த­ளிக்­கின்­றது. இந்­நி­லையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலால் நாடு பாரிய பின்­ன­டை­வுக்கு முகம் கொடுத்­துள்­ளது. இதனால் நாட்­டுக்கு வரு­மானம் ஈட்­டித்­தரும் மிகப்­பி­ர­தான துறை­யான சுற்­று­லாத்­துறை பாரி­ய­ளவு வீழ்ச்­சி­யை­டைந்­துள்­ளது. 

இந்­நி­லையில் யாசகம் பெறு­வோரின் எண்­ணிக்­கையும் தொடர்ந்து அதி­க­ரித்துச் செல்­லு­மாயின் நாட்டின் செழிப்பு நிலை கேள்விக் குறி­யா­கி­விடும்.  

எனவே தலை­ந­க­ரங்­களில் குறிப்­பாக மக்கள் நட­மாட்டம் அதிகமுள்ள இடங்களில்  பெருகிவரும் யாசகர்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் ஆட்சியிலுள்ளவர்கள் சிறந்த தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதேநேரம் இலகுவாக பணம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாக யாசகத்தை தேர்ந்தெடுத்துள்ள தரப்பினருக்குமான வாழ்வாதார திட்டங்களை இனங்கண்டு அவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற ரீதியில் யாசகமில்லாத நாடு சாத்தியமில்லை என்றாலும் கூட சமூகத்தில் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு  ஆதரவற்ற நிலையிலுள்ள தரப்பினருக்கு கைகொடுத்து உதவிக்கரம் நீட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்தினுடையது. அதேவேளை மேற்குறிப்பிட்ட முதியவரின் கதையை மனதிற்கொண்டு நாமும் இயன்றளவு நமக்கென சேமிப்பு, காப்புறுதி என்பவற்றில் முதலீடுகளை மேற்கொள்வோமானால் நாளை நாமும் இவரைப் போன்று ஏமாற்றத்தோடு காலம் கடத்த வேண்டிய தேவையிருக்காது. 

- நிவேதா அரிச்சந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04