எதிர்காலத்தில் மகா சங்கத்தினரின் மனதை புன்படுத்தும் விதமாக எந்த வித கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கும், ரஞ்சன் ராமநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மகா சங்கத்தினரை அவமதித்ததாக வெளியான அறிக்கை தொடர்பிலும் பிரதமர் இதன்போது தன்னிடம் விளக்கம் கோரியதாகவும், அதற்கு தான் ஒருபோதும் மகா சங்கத்தினர் என்ற பெயரை ஒருபோதும் உபயோகப்படுத்தவிலை. நான் கூறியது என்னவென்றால், காவியுடை அணிந்தவர்களால் 90 சதவீதமான துறவிகள் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றார்கள் என்று தான் என பிரதமரிடம் தான் கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் காவியுடை அணிந்தவர்களால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட ஏனைய துறவிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் காட்டியபோது அவர் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.