வட சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள பிராந்தியத்திலுள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலொன்றில் குறைந்தது 28 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பலியானவர்களில் சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் துருக்கிய எல்லைக்கு அண்மையில் இட்லிப் மாகாணத்திலுள்ள சமதா நகருக்கு அருகிலுள்ள கமோனா முகாம் அழிவடைந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி தாக்குதல் சிரிய அல்லது ரஷ்ய போர் விமானங்களால் நடத்தப்பட்டதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிரியாவிலான சமாதான உடன்படிக்கையின் நீடிப்பு உறுதிப்படுத்தப்பட்டதற்கு ஒரு நாள் கடந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தத்தையடுத்து சிரிய இராணுவமும் ஜிஹாதிகள் அல்லாத கிளர்ச்சியாளர்களும் அலெப்போ நகரைச் சூழ்ந்துள்ள பிராந்தியங்களில் தற்காலிக யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் கண்டிருந்தனர்.

கமோனா அகதிகள் முகாமில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் அந்த அகதி முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மிகவும் மோசமான நிலையில் அந்த முகாமில் தங்கியிருந்த மக்களை இலக்கு வைத்து இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என என வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜோஷ் ஏர்னஸ்ட் தெரிவித்தார்.