(எம்.எப்.எம்.பஸீர்)

எவன்கார்ட் எனும் பெயரில் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை  முன்னெடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு  சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவி செயலர்  தமயந்தி ஜயரத்ன  ஆகியோரை கைது செய்வது தொடர்பில்  ஆலோசனை வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேராவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்த கைதுக்கான ஆலோசனை வழங்கப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். 

சமன் திஸாநாயக்க மற்றும் தமயந்தி ஜயரத்ன ஆகியோரை இந்த விவகாரத்தில் ஏன் கைது செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விரிவாக பொலிஸ் மா அதிபருக்கு விளக்கியுள்ள சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, சமன் திஸாநாயக்க உயர் நீதிமன்றில் முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனு கூட அவரது மனுவில் எந்த விதமான நியாயமான காரணிகளும் இல்லை என கருதி நிராகரிக்கப்ப்ட்டுள்ளதாக சுட்டிக்கடடியுள்ளார்.

இந்நிலையில் சமன் திஸாநாயக்கவுக்கு மேலதிகமாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட உதவிச் செயலாளர் தமயந்தி ஜயரத்னவையும் கைதுசெய்து எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.