(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முக்கிய சூத்திரதாரியான  முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை ஜனாதிபதியால் ஒருபோதும்  நாட்டுக்கு  அழைத்து வர முடியாது. அரசாங்கத்தின் ஆதரவுடனே பிணைமுறி மோசடி இடம் பெற்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்கும் காலத்திலே அரசாங்கம்  செயற்பட ஆரம்பித்துள்ளது.  முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த நான்கு வருடகாலமாக  மத்திய  வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னெடுத்த  விசாரணைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடைகளை ஏற்படுத்தினார் என ஜனாதிபதி அரசியல் நெருக்கடியின் போது குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரையில் அர்ஜுன மகேந்திரனை ஜனாதிபதியால் ஒருபோதும் நாட்டுக்கு அழைத்து வர முடியாது.  பிணைமுறி மோசடிக்கான இலகு வழிமுறைகளை பிரதமரே ஏற்படுத்திக் கொடுத்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்  முன்வைக்கப்பட்ட சாட்சியங்களில்  தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நல்லாட்சி என்ற  பெயரில் ஆட்சியமைத்த தேசிய அரசாங்கத்தின் முறைக்கேடுகள்  ஆட்சிக்கு வந்த ஒன்றரை மாதத்திற்குள் மத்திய வங்கியின் மோசடியின் ஊடாக வெளிப்பிட்டு விட்டது. கடந்த அரசாங்கத்தை விமர்சித்து ஆட்சிக்கு வந்த  அரசாங்கத்திலே நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிணைமுறி மோசடி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.