பதுளை மாவட்டத்தில் சுகாதார வசதிகளில்லாத மலசல கூட வசதிகளின்றி பத்தாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டு குடும்பங்கள் ( 10,992 )  உள்ளதாகவும் இவற்றில் தொள்ளாயிரத்து எண்பத்து எட்டு குடும்பங்கள்  (988) பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வென்றில் தெரியவந்துள்ளதாக பதுளை மாவட்ட அரச செயலக செயல்திட்டப்பணிப்பாளர் எம்.கே. டியுசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ பதுளை மாவட்டத்திலுள்ள ஐயாயிரத்து அறுநூற்று ஐந்து குடும்பங்களுக்கு (5605) தனியாக எவ்வகையிலான மலசலகூட வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகின்றன. 

இதனால் அக்குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கிய வண்ணமுள்ளனர். மேலும், நான்காயிரத்து முந்நூற்று தொந்நூற்று ஒன்பது குடும்பங்கள் (4399) தற்காலிக மலசலகூடங்களை பாவித்து வருகின்றனர்.

ஆகவே, இத்தகைய குடும்பங்கள் தற்போது இனம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கான மலசலகூட வசதிகளை சுகாதார முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டியது, காலத்தின் அவசியத்தேவையாகவுள்ளது. ஆகையினால் இவ்விபரங்களை  நிதி அமைச்சிற்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றதும், மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.