உலகநாயகன் கமல்ஹாசன், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணையும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, பொருளாதார பற்றாகுறை காரணமாக தடைபட்டது.

 தற்போது இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடக்சன்ஸ் படத்தைத் தொடர்ந்து தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், படத்தின் பணிகள் மீண்டும் சுறுசுறுப்பு அடைந்திருக்கின்றன.

இந்தப் படத்தில் இளம் நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஏற்கனவே முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். தற்போது இணைந்திருக்கும் இந்த இரண்டு நடிகைகளில் ஒருவர் படத்தில் நடிக்கும் சித்தார்த்திற்கு ஜோடியாக நடிக்கக்கூடும் என்று தெரியவருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஒகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் திகதியன்று தொடங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது க/ பெ ரணசிங்கம் என்ற படத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்  என்பதும், நடிகை ப்ரியா பவானி சங்கர், குருதி ஆட்டம், வான், கசடதபற, மாஃபியா, இன்று நேற்று நாளை 2 ,ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.