மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்ற குளவித் தாக்குதலில்  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர்  ஒருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலைய வளாகத்தை அவர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த கருங்குளவிகள் பொலிஸ் உத்தியோகத்தரின் தலையிலும் மார்பிலும் கொட்டியுள்ளன.

உடனடியாக மயக்கமடைந்த அவர் அருகிலுள்ள வாகரை மாவட்ட வைத்தியசாலையில் சேர்ப்பிக்கட்டார்.

எனினும், கருங்குளவித் தாக்குதலுக்குள்ளாகி சுமார் 45 நிமிட நேரத்தில் அவர் உயிர் பிரிந்து விட்டது.

அவரைப் பரிசோதனை செய்யதபோது அவரது தலையில் 4 இடங்களிலும் மார்பில் ஒரு இடத்திலும் கருங்குளவிகள் கொட்டியிருந்ததாக பிரதேச மரணவிசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.

சீனன்குடா, கெமுனுபுர, ஐந்தாம் கட்டையை அண்டி வசிக்கும்  மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரதாஸ வணிஹசிங்ஹ (வயது 54) என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் செவ்வாய்க்கிழமை 16 பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் இடம்பெற்றதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் ஒருவர் இவ்விதம் கருங்குளவித் தாக்குதலுக்குள்ளாகி சுமார் 45 நிமிட நேரத்தில் மரணித்த சம்பவம் சரித்திரத்தில் இதுவே முதற் தடவையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.