லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் இன்றைய இரண்டாம் சுற்றுக்கான முன்னோடி போட்டியில் சமோஆவிடம் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை 55 க்கு 65 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது.

ஆரம்பத்தில் மிகத் திறமையாக விளையாடிய இலங்கை வீராங்கனைகள், அடுத்து மூன்று ஆட்ட நேரப் பகுதிகளில் தடுமாற்றத்துக்குள்ளாகி ஆட்டத்தின் பிடியைத் தளரவிட்டனர்.

பந்து பரிமாற்றம், எதிர்த்தாடுதல், தடுத்தாடுதல் அனைத்திலும் தடுமாறியதால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் முழுத் திறமையுடன் விளiயாடிய இலங்கை, அப் பகுதியை 17 க்கு 13 என்ற கோல்கள் கணக்கல் தனதாக்கிக்கொண்டது.

ஆனால், இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் தவறுகளுக்கு மத்தியில் தடுமாறிய இலங்கை, அப் பகுதியை சமோஆவுக்கு 10 க்கு 19 என்ற கோல்கள் கணக்கில் தாரைவார்த்தது. இலங்கை வீராங்கனைகள் பந்து பரிமாற்றங்களில் விட்ட தவறுகளும் கோல் போடும்போது இலக்கு தவறியமையும் சமோஆவுக்கு சாதகமாக அமைந்தது. 

இடைவேளையின்போது சமோஆ 32 க்கு 27 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் இலங்கை அணியினர் தவறுகளைத் திருத்திக் கொண்டு விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவேகமற்ற வேகத்துடன் விளையாடியதால் சமோஆவின் கை மேலோங்கியது. இதன் பலனாக மூன்றாவது கால் மணி ஆட்ட நேரப் பகுதியையும் சமோஆ 17 க்கு 13 என தனதாக்கிக்கொண்;டது.

கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியில் இரண்டு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவியதுடன் இலங்கை வீராங்கனைகள் முன்னைய தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடுவதை அவதானிக்க முடிந்தது. 

ஆனால் காலந்தாழ்த்திய இலங்கையின் முயற்சி கைகூடவில்லை. கடைசி கால் மணி நேர ஆட்டப் பகதியை 16 க்கு 15 என தனதாக்கிக்கொண்ட சமோஆ 65 க்கு 55 என்ற கோல்கள் கணக்கில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொண்டது.

தர்ஜினி சிவலிங்கம் இப் போட்டியில் 58 முயற்சிகளில் 52 கோல்களைப் போட்டார். துலாஞ்சலி வன்னிதிலக்க 3 முயற்சிகளில் 3 கோல்களைப் போட்டார்.

நேற்றைய போட்டியுடன் தர்ஜினி சிவலிங்கம் ஐந்து போட்டிகளில் 243 கோல்களைப் போட்டுள்ளார்.

இந்நிலையில் தரநிலைப்படுத்தலுக்கான 13ஆவது அல்லது 14ஆவது இடத்துக்கு போட்டியிடுவதாக இருந்தால் நாளை நடைபெறவுள்ள பிஜிக்கு எதிரான போட்டியில் இலங்கை கணிசமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

நாளைய போட்டிக்கான வியூகங்கள் எவ்வாறாக அமையும் என பயிற்றுநர் திலக்கா ஜினதாசவிடம் கேட்டபோது, 

சமோஆவுடனான போட்டியில் வீராங்கனைகள் தடுமாற்றத்தை எதிர்கொண்டதாலேயே தோல்வியைத் தழுவ நேரிட்டது. 

எனினும் பிஜியுடனான நாளைய போட்டியில் வெற்றிபெறுவதை மாத்திரம் குறியாகக் கொண்டு சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடவுள்ளோம். நாளைய போட்டியில் இலங்கை வீராங்கனைகள் நூறு வீத ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என பதிலளித்தார்.

இங்கிலாந்தின் லிவர்பூலிலிருந்து நெவில் அன்தனி)