கொடிய குற்றங்களல்லாத போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட சிறுகுற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, சிறையில் இருந்து விடுவிக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பொறுப்பேற்ற பராக் ஒபாமா, சிறை கைதிகளுக்கான சீர்திருத்தம் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நாட்டில் உள்ள முக்கிய சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட்ட அவர், கொடிய குற்றங்களல்லாத போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட சிறுகுற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, சிறையில் இருந்து விடுவிக்க முடிவு செய்தார்.

இதில் ஒருகட்டமாக 110 ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட 306 பேரை விடுதலை செய்ய ஒபாமா இன்று உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தனது வலைப்பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வன்முறைசாராத சிறுகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை போன்ற அதிகபட்ச தண்டனை விதித்து சிறைகளில் அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை என நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.