(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள என்ன கொள்கைத்திட்டம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,  அவர்கள் எதனைக் கூறி தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுகொள்ளப்போகின்றனர். அதனை முதலில் அவர்கள் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் எமது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு பல சலுகைகளை உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். அதேபோல் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தை நாட்டினை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

எதிர்க்கட்சியைப் போல் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. ரணிலா, சஜிதா அல்லது கரு ஜெயசூரியவா என்ற குழப்பம் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களிடம் இல்லை.

அடுத்து இடம்பெற்றுவது ஜனாதிபதி தேர்தலா அல்லது அதற்கு முன்னர் மாகாணசபை தேர்தல்களை நட்டதுவதா என்ற கேள்விகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுள்ளார். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதும் இதுவே அவரது நிலைப்பாடாக இருந்தது. தேர்தல்களை  விரைவில் நடத்த வேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய கட்சி உறுதியாகவே உள்ளது. நாம் தேர்தல்களை நடத்த முயற்சிகள் எடுத்த நேரங்களில் ஜனாதிபதியும் அவரது கட்சியுமே தேர்தல்களை நடத்த விடாது தடுத்தனர். இப்போது ஐக்கிய தேசிய கட்சியை குறை கூறுகின்றனர். எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஒரு தேர்தலை நடத்தியாக வேண்டும். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்,