2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில்,அறிமுக இயக்குனர் பிரெடரிக் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

ஜோதிகா நடிப்பில் வெளியாகி, சர்ச்சையான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’. இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஜே ஜே பிரெடரிக் இயக்கத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த்  வசந்தா இசையமைக்கிறார். அமரன் கலை இயக்கத்தை கவனிக்க,  ரூபன் படத்தை தொகுக்கிறார்.

இப்படத்திற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர்களான பிரம்மா, கே.பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், பார்த்திபன், தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்திவேல் உள்ளிட்ட பலருடன் படக்குழுவினரும் பங்குபற்றினர்.

ஜோதிகா தற்பொழுது ‘குலேபகாவலி’ பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜாக்பாட் என்ற படத்திலும், மலையாளத்தின் முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கார்த்தியின் சகோதரியாக பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். 

தொடர்ச்சியாக கதைகளை தெரிவு செய்து,கதையின் நாயகியாக நடித்து வருவதில் ஜோதிகா தீவிர கவனம் செலுத்தி வருவது, ஆரோக்கியமான முடிவு என்கிறார்கள் திரையுலகினர்.