தொழில் நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? என்பதை ஆராய்ந்து கண்டுபிடிக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி இடம்பெற்று வருகின்றது.

இந்த ஆராய்ச்சியில் முதலில் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியிருந்த நிலையில் பின்னர் அந்த போட்டியில் சீனாவும் சேர்ந்து கொண்டது.

இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த போட்டியில் இந்தியாவும் இறங்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு ஏவியது. அது வெற்றிகரமாக தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டது.

நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திரயான்-1 உறுதி செய்தது. இது தொடர்பாக சந்திரயான்-1 அனுப்பிய முப்பரிமாண புகைப்படங்கள் அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகள் நடத்திய ஆய்வையும் விட துல்லியமாக இருப்பதைக் காட்டின. இதை அடிப்படையாகக் கொண்டு நிலவில் அடுத்தக்கட்ட ஆய்வை மேற்கொள்ள “சந்திரயான்-2” என்ற விண்கலத்தை இந்தியாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் செய்தனர்.

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஆண்டு மார்ச் மாதமே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 நிலவில் தரை இறக்கும் லேண்டர் கருவியில் மாற்றம் செய்யப்பட்டதால் 4 தடவை சந்திரயான்-2 விண்ணில் ஏவுவது பிற்போடப்பட்டது.

5-வது முயற்சியாக இன்று ( ஜூலை 15 ஆம் திகதி ) சந்திரயான்-2 விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

3.8 தொன் எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை 640 தொன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-மிமிமி ரொக்கெட் மூலம் ஏவ ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 15 மாடிகள் உயரம் கொண்ட இந்த ரொக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் செல்லமாக “பாகுபலி” என்று அழைக்கின்றனர். இந்த ரொக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு ஆரம்பமாகியது.

இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய ரூபா மதிப்பில் 978 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு பயண திட்டத்தை காண ஸ்ரீஹரி கோட்டாவில் சுமார் 5 ஆயிரம் பேர் குவிந்திருந்தனர். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் சந்திரயான்-2 பறப்பதை நேரில் பார்க்க வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு பிஎஸ்.எல்.வி. மார்க்-மிமிமி ரொக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி ஆரம்பமாகியது. கிரையோஜெனிக் எந்திரத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது மிக நுணுக்கமான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதை சரி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் செய்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

சற்று தாமதமாக அல்லது நாளை சந்திரயானை விண்ணில் ஏவும் வகையில் நேரத்தை மாற்றலாமா? என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் தேவைப்படலாம் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சந்திரயான்-2 பயண திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

இதனால் சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை திட்டமிட்டப்படி விண்ணில் பறக்கவில்லை. நிலவுக்கு செலுத்தப்படவிருந்த 2.51 மணிக்கு சுமார் 56 நிமிடங்களுக்கு முன்னதாக சந்திரயான்-2 பயணம் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர்.

சந்திரயான்-2 விண்கலம் மீண்டும் விண்ணில் செலுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்த சந்திரயான்-2 பயண திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் இஸ்ரோ நிகழ்த்த இருந்த சில சாதனைகள் கை நழுவிப் போனது. 

இன்றைய தினம் (ஜூலை 15) அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்த 50 ஆவது ஆண்டு தினமாகும். அந்த நாளில் நிலவுக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புறப்படுவது முக்கியமானதாக கருதப்பட்டது. அந்த அரிய சாதனை கை நழுவிப் போனது.

சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென் பகுதியில் செப்டம்பர் 7 ஆம் திகதி தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதுவரை நிலவை ஆராய்ச்சி செய்துள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகள் நிலவின் தென் பகுதிகளில் தங்கள் விண்கலங்களை தரை இறக்கியது இல்லை. அந்த சாதனையையும் சந்திரயான்-2 செய்ய இருந்தது. அந்த சாதனையும் தாமதமாகி உள்ளது.

செப்டம்பர் மாதம் சந்திரயானை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணிகளை முன்னெடுத்தாலும் அதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. நிலவின் தெற்கு பகுதியில் நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் சமயத்தில் சந்திரயான்-2 ஐ தரை இறங்க செய்ய வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.

குறிப்பிட்ட கால அளவில் விண்ணில் செலுத்தப்பட்டால்தான் நிலவின் தென் பகுதியை திட்டமிட்டப்படி சந்திரயான்-2 சென்று சேர முடியும். அதற்கு இன்னும் 7 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று ஒருதகவல் வெளியாகியுள்ளது. இதனால் சந்திரயான்-2 பயணத்தில் அடுத்த விண்ணில் ஏவும் அறிவிப்பு எப்போது முடிவாகும் என்பது இன்னும் 10 நாட்கள் கழித்தே உறுதியாக தெரியவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.