நடிகர் வெற்றியின்  நடிப்பில் வெளியான ‘ஜீவி’ படத்தின் இயக்குனர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

கடந்த ஆண்டில் ‘ராட்சசன்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். அவர் தற்போது எழில் இயக்கத்தில் ‘ஜகஜ்ஜால கில்லாடி’ என்ற படத்திலும், ‘இன்று நேற்று நாளை ’படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ,அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜீவி ’என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கோபிநாத் மற்றும் அப்படத்தின் கதாசிரியர் பாபு தமிழ் என இருவரும் இணைந்து பணியாற்றவிருக்கும் புதிய படத்தை, நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார். 

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அண்மையில் அவர் தன்னுடைய பெற்றோர்களின் திருமண நாளை கொண்டாடும் வகையில் ட்வீட்டரில் அறிவித்திருக்கிறார்.

இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதை-வசனம் எழுதி, சஞ்சீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.