- வீ.தனபாலசிங்கம்

ஒரு பதவிக்கால ஜனாதிபதி என்று தன்னை பிரகடனம் செய்துகொண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆட்சியதிகாரத்தில் இருக்கவேண்டும் என்ற வேட்கையில் கடைப்பிடிக்கின்ற அண்மைக்கால அணுகுமுறைகளும் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளும் இன்று ஆட்சிமுறையில்  காணக்கூடியதாக  இருக்கின்ற குளறுபடிகளும் கெல்லாம் முக்கிய  காரணங்களாக அமைகின்றன.              

2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று மறுநாள் மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்  பதவிப்பிரமாணம் செய்த பின்னர் அங்கிருந்து நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று சிறிசேன கூறியபோது அவர் தனது பதவிக்காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் என்று நம்பியவர்கள் பலர். நாட்டுக்கு நல்லாட்சியைத் தரப்போவதாகவும் புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமவுடன் சேர்ந்து கூறிய  சிறிசேன நாலரை வருடங்கள் கடந்த நிலையில் இன்று நல்லாட்சி என்பதற்கு முற்றிலும் நேர்எதிரான ஒரு ஆட்சிறைக்கு தலைமைதாங்குகி்ற விசித்திரத்தை நாம் காண்கிறோம்.

ஜனாதிபதி சிறிசேனவைப் பொறுத்தவரை, தனது முதலாவது பதவிக்காலத்தின் முடிவுக்குப் பிறகு அதிகார  அரசியலில் தனக்கு ஒரு இடத்தை எவ்வாறு  தேடிப்பிடித்துக்கொள்வது என்பதிலேயே முழு அக்கறையையும் செலுத்திக்கொண்டிருக்கிறார். அந்த நோக்கை  அடைவதற்காக தன்னால் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகளினால் ஆட்சிமுறைக்கு ஏற்படக்கூடிய அபகீர்த்தியைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவராகவே அவர் நடந்துகொள்கிறார். எந்த நேரத்தில் எவ்வாறு நடந்துகொள்வார் என்று எதிர்வுகூறமுடியாத அளவுக்கு குளறுபடியான ஒரு அரசியல் தலைவராக சிறிசேன மாறியிருக்கிறார்.

இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்றும் ஆட்சிமுறையில் நிலவுகின்ற குழப்பங்களுக்கு முடிவைக்கட்டுவதற்கு வாய்ப்பொன்று கிடைக்கும் என்று நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி சிறிசேன தனது முதலாவது பதவிக்காலத்தை மேலும் ஒரு ஐந்து மாதங்களுக்கு நீடிப்பதற்கான வழிமுறைகளை நாடுவதில் கவனம் செலுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

2018 முற்பகுதியில் ஜனாதிபதி சிறிசேன தனது பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்று அறிந்து கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தை நாடினார் என்பதும் பதவிக்காலம்  அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் ஏற்பாட்டின் பிரகாரம் 5 வருடங்கள் மாத்திரமே என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது என்பதையும் நாம் எல்லோரும் அறிவோம். அரசியலமைப்பின் முன்னைய ஏற்பாட்டின்படி 6 வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 19 வது திருத்தம் 5 வருடங்களாகக் குறைத்தது. அந்த திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் 2015 ஜனவரியில் ஜனாதிபதியாகத் தெரிவானதால், முன்னைய அரசியலமைப்பு ஏற்பாட்டிற்கிணங்க 6 வருடங்கள் தன்னால் பதவியில் இருக்கமுடியும் என்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான  புதிய ஏற்பாட்டை தனக்கு பிரயோகிக்க முடியாது என்றும் நம்பிக்கொண்டே உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அவர் கேட்கத் தீர்மானித்தார். ஆனால், நீதிமன்றத்தின் அறிவிப்பு அவருக்கு பின்னடைவாகப்போனது.

அதேவேளை, சிறிசேன 6 வருடங்கள் பதவியில் இருக்கலாம் என்று உச்சநீதிமன்றம்  கூறியிருந்தால், ஒரு ஜனாதிபதி இரு பதவிக்காலங்களுக்கே ஆட்சியதிகாரத்தில் இருக்கமுடியும் என்ற 19 திருத்த ஏற்பாட்டை தனக்கும் பிரயோகிக்கமுடியாது என்று வியாக்கியானம் செய்யலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனப்பால் குடித்துக்கொண்டிருந்தார். அதாவது ஏற்கெனவே இரு பதவிக்காலங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருந்த தனக்கு  மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்ப்பு ( சிறிசேனவுக்கு வசதியான முறையில் உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயம் அமையும் பட்சத்தில் ) கிட்டும் என்று ராஜபக்ச எதிர்பார்த்தார். அவருக்கும் அது சரிப்பட்டு வரவில்லை.

இப்போது ஜனாதிபதி சிறிசேன தனது 5 வருட பதவிக்காலம் எப்போது தொடங்கியது எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்பதற்கு முனைந்துநிற்கிறார். அதற்கு அவர் தரப்பில் முன்வைக்கப்படுகின்ற வாதத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜெயசேகர மூலமாக அடிக்கடி செய்தியாளர் மகாநாடுகளில் கேட்கக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதியாக தான் பதவிப்பிரமாணம் செய்த திகதியில் இருந்து 5 வருட பதவிக்காலம் தொடங்கியதா அல்லது 19 வது திருத்தம் நடைமுறைக்கு வந்த திகதியில் இருந்து தொடங்கியதா என்பதே சிறிசேன இப்போது உச்சநீதிமன்றத்திடமிருந்து அறியவிரும்புகின்ற அபிப்பிராயமாகும். 19 வது திருத்தம் பாராளுமன்றத்தில் 2015 ஏப்ரில் 24 ஆம் திகதி  நிறைவேற்றப்பட்டது. அதில் சபாநாயகர் கரு ஜெயசூரிய  2015 மே 15 ஆம் திகதி கைச்சாத்திட்டார். சபாநாயகர் கைச்சாத்திட்ட திகதியில் இருந்தே சட்டமொன்று நடைமுறைக்கு வருகிறது என்பதால் அந்த திருத்தச்சட்டத்தின் மூலமாக 5 வருடங்களாகக் குறைக்கப்பட்ட தனது பதவிக்காலம் அந்த மே 15 இல் இருந்தேதொடங்குகிறது என்பதே ஜனாதிபதி சிறிசேன தரப்பின் வாதம். 

அவர் இது விடயத்தில் இன்னமும் உச்சநீதிமன்றத்தை  நாடவில்லை. விரைவில் நாடக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பதவிக்காலம் குறித்து அறிந்துகொள்வதற்காக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சிறிசேன உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை நாடியபோது அன்றைய பிரதம நீதியரசர் பிரியந்த டெப் தலைமையிலான அமர்வு 5 வருட பதவிக்காலத்தை 2015 ஜனவரி 9 ஆம் திகதியில் இருந்து கணிப்பிட்டு அது 2020 ஜனவரி 9 ஆம் திகதி முடிவடைகிறது என்று அறிவித்தது.  திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் 2015 மே 15 ஆம் திகதி கைச்சாத்திட்டிருந்ததை அறியாதவர்களாக அந்த நீதியரசர்கள் இருந்திருக்க முடியாது. அடுத்த வருட ஜனவரி இரண்டாம் வாரத்தொடக்கத்தில் சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடைகிறது என்ற  அவர்களின் அபிப்பிராயத்துக்கு மாறாக தற்போதைய பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அபிப்பிராயத்தை அறிவிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சிறிசேனவின் பதவிக்காலம் சபாநாயகர் சட்டத்தில் கைச்சாத்திட்ட திகதியில் இருந்துதான் தொடங்குகிறது என்று உச்சநீதிமன்றம் அபிப்பிராயம் தெரிவிக்குமானால் அவர் மேலும் ஒரு 5 மாதங்கள் பதவியில் நீடிக்கவாய்ப்பிருக்கும்.

அத்தகைய அறிவிப்பை உச்சநீதிமன்றம் செய்யுமா? இறுதியாக பதவியில் இருந்த பிரதம நீதியரசர் நளின் பெரேரா ஓய்வுபெற்ற பின்னர் புதிய பிரதம நீதியரசரின் கீழான  உச்சநீதிமன்றத்திடம்  தனது பதவிக்காலத்தின் தொடக்கம், முடிவு குறித்து ஜனாதிபதி அபிப்பிராயம் கேட்பார் என்று சில மாதங்களுக்கு முன்னர் தயாசிறி ஜெயசேகர கூறியதை எவ்வாறு அர்த்தப்படுத்துவது?