(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் சி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியலில் உள்ள வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி விவகாரத்தை விசாரிக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ். திசேராவை  அச்சுறுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றம் ஒன்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 4 (அ) அத்தியாயத்தின் கீழ் ரத்ன தேரர் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக சி.ஐ.டி. அவதானித்துள்ள நிலையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அத்துடன் இது குறித்து எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.