கலாநிதி வி.சூரியநாராயன்

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 25,500 இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளின் எதிர்காலம் மீது பரந்தளவு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வரவேற்கத்தக்க தீர்ப்பொன்றை 17 ஜூன் 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைங்கிளையின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கியிருந்தார்.

தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்று இந்த அகதிகள் செயதிருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்ப்பில் நீதிபதி இந்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியிருந்தார்.

     இந்தியக்குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்த 65 அகதிகளும் திருச்சியில்உள்ள கொட்டப்பட்டு முகாமில் வசிக்கிறார்கள்.அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை உள்ளாட்சி அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்கள். இந்த விண்ணப்பங்கள் புதுடில்லிக்கு  அனுப்பிவைக்கப்படவில்லை. ஏனென்றால் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில்லை என்பது புதுடில்லியின் கொள்கையாக இருக்கிறது.வழமைநிலை திரும்பும்போது அகதிகள் தங்கள் தாயகத்துக்கு திரும்பிச்செல்வார்கள் என்ற நிலைப்பாட்டை புதுடில்லி கொண்டிருக்கிறது.

    இயல்புநிலைக்கு மாறான ஒரு  சூழ்நிலை முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாக இருக்கிறது.இந்தியா இதுவரையில் தேசிய அகதிச்சட்டம் ஒன்றை இயற்றவில்லை.அதனால், அகதி என்ற பதம் வரையறைசெய்யப்படவில்லை.அதேவேளை, 1983 ஜூலை இனவன்செயல்களைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பெரும் எண்ணிக்கையில் ஓடிவந்த தமிழர்களுக்கு தன்னியல்பாகவே அகதிகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

அவர்களுக்கு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, மருந்துவகைகள், உறைவிடம், கல்வி மற்றும் உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. மேலதிகமாக, ஒரு வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக முகாம்களுக்கு வெளியே சென்று அவர்கள் தொழில் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது.

    ஆனால், தமிழ் அகதிகள் " சட்டவிரோத குடியேறிகளாக " கருதப்பட்டது கவலைக்குரிய விடயமாக இருந்தது. அதனால், 1955 ஆம் ஆண்டின் இந்தியக்குடியுரிமை சட்டத்தி்ன் 5 வது பிரிவின் கீழ் பதிவுசெய்வதற்கோ அல்லது 6 வது பிரிவின் கீழ் குடியுரிமை பெறுவதற்கோ  தகுதியுடையவர்களாக இருக்கவில்லை." மனுதாரர்கள்  தகுதிக்கு தேவையான சகல பிரமாணங்களையும் பூர்த்தி செய்தாலும் கூட அவர்கள் தங்களது உரிமையாக இநதியக்குடியுரிமையைக் கோரமுடியாது " என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

    " இந்தியக் குடியுரிமை வழங்கக்கோரி இலங்கை அகதிகள் சமர்ப்பிக்கக்கூடிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாகாது " என்று இந்திய அரசாங்கத்திடமிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாகக் குறிப்பிட்டு தமிழக அரசாங்கத்தின் ஙெயலாளர், புனர்வாழ்வுக்கான விசேட ஆணையாளருக்கு 7 நவம்பர் 2007 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

        இடரார்ந்த நிலைவரத்துக்கு மத்தியிலும் நம்பிக்கை தரங்கூடிய சில அறிகுறிகள் தோன்றவே செய்கின்றன.ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து  அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்புவதில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கடும் உறுதியாக இருந்தார்.இலங்கைக்கு திரும்பிச்செல்லத் தயாராயிருப்பதாக படிவங்களில் கைச்சாத்திடுமாறு அகதிகளுக்கு கடுமையான நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. 

அகதிகளை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இன்னொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கக்கூடாது என்று கூறும் மனிதாபிமான அகதி சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை இந்தியா மீறுகின்றது என்று மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டின. இதன் விளைவான அசௌகரியத்தை தவிர்க்குமுகமாக பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வெளியுறவுச் செயலாளர் முச்குந்த் துபேயி்ன் ஆலோசனையின் பேரில் சென்னையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு அனுமதி வழங்கினார்.அகதிகளை நாடு திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் அவர்களின் சுயவிருப்பின் பேரில் நடைபெறுகின்றது என்பதை அத்தாட்சிப்படுத்தும் ஆணை அந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.

    இலங்கைக்கு திரும்பிச்செல்ல மீண்டும் நிர்ப்பந்திக்கப்படக்கூடும் எனனறு அஞ்சிய அகதிகள் பரிகாரம் காண்பதற்கு உயர்நீதிமன்றத்தை நாடி மனுத்தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் வலுக்கட்டாயமாக நாடு திருப்பியனுப்பப்படப்போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டில் தீர்ப்பொன்றை வழங்கியது.

      மனுதாரர்கள் பற்றிய சில விடயங்கள் குறிப்பிடப்படவேண்டியவையாக இருக்கின்றன.இவர்கள் இ்லங்கையில்  பெருந்தோட்டப்பொருளாதாரம் அபிவிருத்திசெய்யப்பட்டபோது 19வது நூற்றாண்டில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய தமிழ் தொழிலாளர்களின் வழித்தோன்றல்களே.அந்த தொழிலாளர்களின் உழைப்பும் வியர்வையும்தான் இலங்கையில் மலேரியா நோயின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய மலைநாட்டுக் காடுகளை ஒரு பசுமைப்பூமியாக மாற்றின.தேயிலை இறக்குமதி இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியது.

     இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றபோது இந்திய தமிழ் தொழிலாளர்கள் நிரந்தர குடியேறிகளாக மாறிவிட்டார்கள் அவர்கள் இலங்கைக் குடியுரிமையைப் பெறவிரும்பினார்கள்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக  சுதநந்திர இலங்ஙையின் முதலாவது பாராளுமன்றம் அவர்களது குடியுரிமைமையைப் பறித்து நாடற்றவர்களாக்கியது.நாடற்ற இந்த தமிழர்களின் பிரச்சினை இலங்கை -- இந்திய உறவுகளில் ஒரு நெருடலான விவகாரமாகமாறியது. 1964 சிறிமா -- சாஸ்திரி  ஒப்பந்தம், 1984 சிறிமா --  இந்திரா காந்தி ஒப்பந்தம் என்று மினிதாபிமானமற்ற இரு ஒப்பந்தங்களின் மூலமாக பெரும் எண்ணிக்கையான இந்திய தொழிலாளர்களு்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதுடில்லி தீர்மானித்தது.ஆனால், அந்த தொழிலாளர்களின் கருத்துகள் கேட்டறியப்படவில்லை. முதலில்  தாயகம் திரும்பியவர்கள் தமிழ்நாட்டில் பெரும் கஷ்டங்களுக்குள்ளானார்கள்.வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியபோன்று, தமிழ்நாட்டவர்கள் இவர்களை இலங்கையர்கள் என்றே  அழைத்தார்கள்.இலங்கையில் மிக நீண்டகாலம் இவர்கள் வாழ்ந்தாலும்  இலங்கையர்கள் என்ற அந்தஸ்தை  ஒருபோதுமே பெற்றதில்லை.

    இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றிய இன்னொரு அம்சம் இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகிறது. தேயிலைத்தோட்டங்கள் இலங்கையின் மத்திய பாகுதியிலேயே இருக்கின்றன. தோட்டங்கள் சிங்களக் கிராமங்களினால் சூழப்பட்டிருக்கின்றன. தங்களது மீட்சிக்கு சுதந்திர தனித்தமிழ் ஈழம் ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அவர்களது  புவியியல் அமைவிடம் புரியவைத்தது. சிங்களவர்களுடனான சுமுகமான உறவுகளிலேயே அவர்களது எதிர்காலம் தங்கியிருக்கிறது.

அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1978 ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இணைந்து தேர்தல்களின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்கியான ஆதரவை வழங்கியது. ஆனால்,  தமிழ் ஈழம் கோரிக்கையுடன் இந்திய வம்சாவளி தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திிக்கொள்ளவில்லை என்றபோதிலும் அவர்களது அமைதியும் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டவையாக இருக்கவில்லை.1977,1981, 1983 ஆண்டுகளில் இடம்பெற்ற இனவன்முறைகளின்போது அவர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டார்கள்.

    1983 வன்முறைகளுக்கு பிறகு அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்களே மனுதாரர்கள்.தங்களது உடமைகள் சகலதையும் விற்றுவிட்டு இந்திய பிரஜகளாகும் நம்பிக்கையில் தமிள்நாட்டுக்கு ஓடிவந்தார்கள். அவர்களது பிள்ளைகள் நாளடைவில் தமிழ்நாட்டவர்களை திருமழஞ்செய்திருக்கிறார்கள்.இலங்கையில் இருக்கும் தங்களது சமூகத்தவர்களுக்கு கிடைக்கின்றதையும் விட கூடுதலான அளவுக்கு மேம்பட்ட கல்வி தமிழ்நாட்டில் அவர்களுக்கு கிடைத்தது.திருச்சி கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்களுடன் நான் நடத்திய கலந்துரையாடலின்போது  " என்னதான் வந்தாலும் நாம் இலங்கைக்கு திரும்பிச்செல்லப்போவதில்லை " என்று அவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

      இந்திய அரசாங்கம் அதன் அகதி கொள்கையை மீள்பரிசீலனை செய்துகொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பு வந்திருக்கிறது. அகதிகள் இந்திய குடியுரிமையை பெறுவதற்கு வகைசெய்யக்கூடிய குடியுரிமை திருத்தச்சட்டமூலம் ஒன்றை 2016 ஆம் ஆண்டில் புதுடில்லி அறிமுகப்படுத்தியது.பாகிஸ்தான்,  பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்களுக்கு  இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அளித்திருந்த உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டதே இந்த சட்டமூலம்.ஆனால், குடியுரிமை வழங்கப்படுவதற்கு இந்துக்கள் மாத்திரம் தனித்து கருத்தில் எடுக்கப்படுவது பாரபட்சமானதாக அமையலாம் என்பதால் சட்டமூலம் குடியுரிமை வழங்கப்படக்கூடியவர்கள் என்ற உரிமையை ' ' 'முஸ்லிம் அல்லாத சிறுபான்மையிருக்கு ' என்று விரிவுபடுத்தியது.

ஆனால், தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த  இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அந்த சட்டமூலத்தை  பிரயோகிக்க இயலாது என்பது அதன் மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு பகுதியாகும்.அத்துடன் முன்னர் சுட்டிக்காட்டியதைப் போன்று 1955 குடியுரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் அவர்கள் பூர்த்திசெய்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

    சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதன் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் இந்தய குடியுரிமை சட்டத்துக்கான உத்தேச திருத்தம் பற்றி குறிப்பிடாதது துரதிர்ஷ்டவசமானதாகும்.பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இனிமேல் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று நடத்தப்படமாட்டார்கள் என்றும் அவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்  என்றும் அந்த திருத்தம் தெட்டத்தெளிவாக கூறுகிறது. குடியுரிமைத் திருத்தச்  சட்டமூலத்தில் உள்ளடக்கப்படுகின்ற நாடுகளில் இலங்கையையும் சேர்க்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை அறிவுறுத்தக்கோரி மனுதாரர்களினால் மனு ஒன்றைத் தாக்கல்செய்ய இயலுமாக இருந்தால் அது மிகவும் நல்லதொரு விடயமாக இருக்கும்.இன்று அச்சத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த " குரலற்றவர்களின் குரலுக்கு " இந்திய பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் சாதகமான முறையில் செவிமடுப்பார்களா? 

( சூரியநாராயன் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய கற்கைகளுக்கான நிலையத்தின் தாபக பணிப்பாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமாவார் )