(இங்கிலாந்தின் லிவர்பூலிலிருந்து நெவில் அன்தனி)

லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வட அயர்லாந்துக்கு எதிரான ஏ குழு உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியிலும் இலங்கை தோல்வியைத் தழுவியது.

உலக வலைபந்தாட்டத் தரத்தில் 8  ஆம் இடத்திலுள்ள வட அயர்லாந்து இப் போட்டியில் இலங்கையை 67 க்கு 50 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றிகொண்டது.

முதலாம் நாளன்று ஸிம்பாப்வே அணியுடனான போட்டியிலும் பார்க்க இப் போட்டியில் இலங்கை அணி திறமையாக விளையாடியதையிட்டு திருப்தி அடைவதாக அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய தெரிவித்தார்.

வட அயர்லாந்துடனான போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 5 கோல் போடும் வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதால் வட அயர்லாந்து 18 க்கு 13 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் வட அயர்லாந்துக்கு ஈடுகொடுத்து விளையாடிய இலங்கைக்கு ஒரு கட்டத்தில் கோல் எண்ணிக்கை வித்தியாசத்தைக் குறைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மத்திய, முன் களங்களில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக அந்த வாய்ப்பு அற்றுப்போனதுடன் கடைசி செக்கன்களில் வட அயர்லாந்து 4 கோல்களைப் போட்டு இரண்டாவது ஆட்ட நேரத்தையும் 16 க்கு 12 என தனதாக்கிக்கொண்டது. இதன் பிரகாரம் இடைவேளையின்போது வட அயர்லாந்து 34 க்கு 25 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

மூன்றாவது ஆட்டநேர பகுதியின் மத்தியில் சோர்வடைந்த தர்ஜினி சிவலிங்கத்துக்குப் பதிலாக எழிலேந்தினி சேதுகாவலர் மாற்று வீராங்கனையாக களம் நுழைந்தார். இதன் மூலம் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் எழிலேந்தினி அறிமுகமானார். ஆனால் அவர் நீண்ட நேரம் விளையாடவில்லை. மறுபடியும் தர்ஜினி சிவலிங்கம் களம் நுழைந்தபோதிலும் அவரது முன்னைய திறமையைக் காணமுடியவில்லை. இந்த ஆட்ட நேர பகுதியியையும் வட அயர்லாந்து 17 க்கு 12 என தனதாக்கிக்கொண்டது.

கடைசி ஆட்ட நேர பகுதியில் இலங்கை வீராங்கனைகள் தவறுகளைக் குறைத்துக்கொண்டு விளையாடியபோதிலும் வட அயர்லாந்த அப் பகுதியையும் 16 க்கு 13 என தனதாக்கி போட்டியில் 67 க்கு 50 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இப் போட்டியில் இலங்கை அணியின் ஆற்றல்கள் குறித்து திருப்தி அடைவதாக அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய போட்டி முடிவில் தெரிவித்தார்.

ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் போன்றல்லாமல் வட அயர்லாந்துடனான போட்டியில் மாறுபட்ட வியூகங்களை அமைத்து விளையாடினோம். குறிப்பாக மத்திய களத்திலேயே ஆட்டத் திறனை அதிகமாகப் பிரயோகித்தோம். பின்கள வீராங்கனைகளும் மத்திய கள வீராங்கனைகளுக்கு மிகுந்த ஒத்தாசையாக விளையாடினர். உலக வலைபந்தாட்ட தரவரிசையில் 8ஆம் இடத்திலுள்ள வட அயர்லாந்துடனான போட்டியில் எமது அணி திறமையை வெளிப்படுத்தியமை திருப்தி தருகின்றது என சத்துரங்கி ஜயசூரிய தெரிவித்தார். 

உலக தரப்படுத்தலில் முதலாம் இடத்திலுள்ள நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை (இன்று) நடைபெறவுள்ள போட்டியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள் எனக் கேட்டபோது, 

அவுஸ்திரேலியாவுக்கு அதிக கோல்கள் போடுவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதே எமது பிரதான நோக்கம். எனவே ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து விளையாடத் தீர்மானித்துள்ளோம். மேலும் உலக தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள நடப்பு சம்பியன் அணியுடன் விளையாடக் கிடைப்பதையிட்டு பாக்கியமாக கருதுகின்றோம். அதன் மூலம் சிறந்த அனுவத்தைப் பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளோம் என்றார்.