இன்றைய திகதியில் எம்மில் பலரும் இரைப்பை புண். நெஞ்செரிச்சல். வயிற்றுப்புண் ஆகியவற்றை தொடர்ந்து புறகணித்தும், சிலர் தற்காலிகமான நிவாரணத்தின் மூலம் இதற்கான தீர்வுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இரைப்பையில் ஏற்படும் புண்களையோ அல்லது பாதிப்புகளையோ உரிய நேரத்தில், சரியான சிகிச்சையை, முழுமையாக மேற்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு எதிர்காலத்தில் இரைப்பை அல்லது உணவு குழாயில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு.

இரைப்பையில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கிருமிகளால் ஏற்படும் தொற்று பாதிப்புகள் என இரண்டு வகையினதான பாதிப்புகளால் இரைப்பை பாதிக்கப்படுகிறது. இதில் எத்தகைய பாதிப்பினால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய ஹைட்ரஜன் ப்ரீத் டெஸ்ட் (  Hydrogen Breath Test )என்ற ஒரு நவீன சோதனையின் மூலம் கண்டறிவார்கள். இதன் மூலம் இரைப்பையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா? என்பதனை துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையளித்து குணப்படுத்துவார்கள்.

இத்தகைய தருணங்களில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கால அளவு வரை, சிகிச்சைகளையும், மருந்து, மாத்திரைகளையும் தொடர வேண்டும் .தற்காலிக நிவாரணம் கிடைத்தவுடன் சிகிச்சைகளை இடை நிறுத்தம் செய்தால், இதன் காரணமாகவே எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கிருமி தொற்றுகள் இல்லாமல், வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் அவர்களுடைய இரைப்பை பாதிக்கப்படடிருந்தால் அதனை எண்டாஸ்கோபி மூலம் துல்லியமாக கண்டறிந்து அதற்கு உரிய தீர்வினை மருத்துவர்கள் வழங்குவார்கள். அதாவது உடற்பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், இவர்களுக்கு எந்த நிலையில் இரைப்பையின் பாதிப்பு இருக்கிறது என்பதனை எண்டாஸ்கோபி மூலம் தெரிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை அளிப்பார்கள். சிலருக்கு இரைப்பையில் ஏற்படும் பாதிப்புகள் குணமாவதற்காக, மருத்துவர்கள் உறங்குவதற்கான சில வழிமுறைகளை பரிந்துரைப்பார்கள். அதனை அவர்கள் உறுதியாக பின்பற்ற வேண்டும்.

இதையும் கடந்து சிலருக்கு இரைப்பையிலிருந்து உணவும், உணவு துகள்களும் உணவுக்குழாய்க்குள் வருகிறதென்றால், அவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்து, லேப்ராஸ்கோபிக் ஃபன்டோபிளிகேஷன்  ( Laparoscopic Fundoplication Suregery) என்ற சத்திரசிகிச்சையை மேற்கொள்வார்கள். இதன் போது இரைப்பையின் வெளிப்பகுதியில் ஒரு உறை போன்ற வலையமைப்பு பொருத்தப்படும். இதன் பிறகு அவர்களுக்கு தொடர்ந்து நெஞ்செரிச்சல் ஏப்பம் ஆகியவை 90 சதவீதம் வரை குறைந்துவிடும். சத்திர சிகிச்சைக்கு பின்னர் அவர்களுடைய உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்குள் செல்லும் உணவு, மீண்டும் உணவுக்குழாய்க்குள் வர இயலாத படி இந்த சத்திர சிகிச்சை பலனளிக்கும். அதே தருணத்தில் இது சத்திர சிகிச்சைக்குப் பின்னர் நோயாளி, டொக்டர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் பாலாஜி.

தொகுப்பு அனுஷா.