பெளத்த பேரினவாதத்துக்கு கடிவாளம் போடவேண்டும்

Published By: Digital Desk 3

13 Jul, 2019 | 02:51 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் இரண்டு விட­யங்கள் வெளிப்­பட்­டி­ருந்­தன. உலக பயங்­க­ர­வா­தத்தின் பிடிக்குள் இலங்கை சிக்­கி­யி­ருக்­கின்­றது என்ற அதிர்ச்சி மிக்க அபா­ய­க­ர­மான உண்மை வெளிப்­பட்­டி­ருந்­தது என்­பது முத­லா­வது. இஸ்­லா­மிய ஜிஹாத் அடிப்­ப­டை­வாதம் இலங்­கைக்குள் வேரூன்றி இருக்­கின்­றது என்­பது இரண்­டா­வது விட­ய­ம். 

இந்த பயங்­க­ர­வா­தத்தில் இருந்தும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தில் இருந்தும் எவ்­வாறு நாடு மீளப் போகின்­றது என்ற கவ­லை­யான நிலை­மையில் இருந்து விடு­ப­டு­வ­தற்­காக நாடு போராடிக் கொண்­டி­ருக்­கின்­றது. சமூ­கங்­களும் வெவ்வேறு வழி­களில் இதனால் போராட வேண்­டிய ஒரு நிலை­மைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றன. 

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ணியில் உள்ள பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு பாது­காப்பு நட­வ­டிக்­கை­களும் இறுக்­க­மாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களை முன்­ன­தா­கவே முறி­ய­டிக்க முடி­யாமல் போன பாது­காப்பு குறை­பா­டுகள் தொடர்­பான விடயம் அர­சியல் சர்ச்­சை­யாக நாட்டை உலுப்பிக் கொண்­டி­ருக்­கின்­றது. 

பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான முன்­னெச்­ச­ரிக்கை தக­வல்கள் கிடைத்­தி­ருந்த போதிலும், தேசிய பாது­காப்பில் ஏற்­பட்­டி­ருந்த தவ­றுகள் அல்­லது ஓட்­டை­க­ளுக்­கான பொறுப்­பேற்றல் விடயம் தீவி­ர­மான அர­சியல் போராட்­ட­மா­கவே மாறி­யி­ருக்­கின்­றது.

இந்த இரண்டு நிலை­மை­க­ளுக்கும் அப்பால் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராகக் கிளர்ந்­துள்ள பௌத்­த­வாதம் புதி­ய­தொரு நெருக்­க­டியை உரு­வாக்கி இருப்­பதைக் காண முடி­கின்­றது. 

தலை­கீ­ழான நிலைமை

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களில் பெருந்தொகையில்  தமி­ழர்­களே – தமிழ் கிறிஸ்­த­வர்­களே கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். அந்த வகையில் அந்தத் தாக்­குதல் தமிழ் மக்­களைக் குறி­வைத்து நடத்­தப்­பட்­டதோ என்ற சந்­தே­கத்­திற்கு வழி­யேற்­ப­டுத்தி இருந்­தது. 

தமிழ்மக்­களே பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், கத்­தோ­லிக்க மதத் தலை­வ­ரா­கிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் சம­யோ­சித சமா­தான அணு­கு­முறைச் செயற்­பாட்டின் கார­ண­மாக தமிழ்மக்கள் உணர்ச்சி வசப்­பட்டு ஆத்­தி­ர­ம­டை­யாமல் தடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

தற்­கொலைத் தாக்­கு­தல்­களை அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மி­யர்­களே நடத்­தி­யி­ருந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யதும், சிங்­கள பௌத்­தர்கள் வெகுண்­டெ­ழுந்­தனர். பௌத்த பிக்­கு­களும் முஸ்­லிம்கள் மீதான சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களின் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்­களின் ஓர் அம்­ச­மா­கவே இந்த தாக்­கு­தல்கள் அமைந்­தி­ருந்­தன. ஏனெனில் உயிர்த்த ஞாயிறுதின தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற சில வாரங்­க­ளுக்குப் பின்­னரே முஸ்­லிம்கள் மீதான இந்தத் தாக்­கு­தல்கள் சிலாபம், மினு­வாங்­கொட உள்­ளிட்ட பகு­தி­களில் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களின் இன­வாத சீற்றம் திடீ­ரென ஏற்­பட்­ட­தல்ல. அது காலத்­துக்குக் காலம் மாத்­தறை, அம்­பாறை, கண்டி என நாட்டின் பல இடங்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன. இந்தத் தாக்­கு­தல்கள் பகி­ரங்­க­மாக திட்­ட­மி­டப்­பட்ட வகையில் வன்­முறைக் குழுக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த போதிலும், அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

இதனால் அவர்­க­ளு­டைய நட­வ­டிக்­கைகளை அர­சாங்­கம் அங்­கீ­க­ரித்ததாகவே கருத வேண்­டிய நிலை­மையை உரு­வாகி­யி­ருந்­தது. ஒரு ஜன­நா­யக நாட்டில் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ள் சிறு­பான்மை இன மக்களை அடக்கி ஒடுக்­கலாம் என்ற நிய­திக்கு இட­மில்லை. சிறு­பான்மை இன மக்­க­ளுடன் இணைந்து விட்டுக் கொடுத்து, அவர்­க­ளுயை உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளித்து, அவற்­றுக்குப் பாது­காப்பு வழங்கி வாழ வேண்டும் என்­பதே ஜன­நா­யக நடை­மு­றை­. ஆனால் இலங்­கையின் ஜன­நா­ய­கத்தில் அது தலை­கீ­ழாகவே இருக்­கின்­றது. 

இன­வாத பகை உணர்வுப் போக்கு

உயிர்த்த ஞாயிறுதின தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதக் கொள்­கையைக் கொண்ட பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் பாது­காப்புப் படை­யி­னரும் பொலி­ஸாரும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது செய்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்தி, நாட்டு மக்­களின் பாது­காப்பு உறுதி செய்­யப்­பட்டு, அவர்கள் தமது வழ­மை­யான வாழ்­வியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு வழி செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அதே­வேளை முஸ்­லிம்கள் மத்­தியில் சிறிய எண்­ணிக்­கை­யா­ன­வர்­களே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தைக் கடைப்­பி­டித்து, பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்­பதும் உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால், சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் அப்­பா­வி­க­ளான முஸ்­லிம்­களும் அடங்­கி­யி­ருந்­த­தனால், அவர்­களைத் தரம் பிரித்து, அடை­யாளம் கண்டு விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் தலை­வர்­க­ள் முன்­வைத்திருந்தார்கள். 

அந்த கோரிக்­கையின் நியா­யத்­தன்மையை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்டு அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்திருந்தது. ஆனாலும், சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களின், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மோச­மான இன­வாத அணு­கு­மு­றையும் பகை உணர்வுப் போக்கும் தணி­ய­வில்லை. 

மாறாக சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தத்தில் ஊறிப்­போ­யுள்ள பொது­ப­ல­சேனா போன்ற இன­வாத தீவிரப் போக்­கு­டைய பௌத்த அமைப்­புக்­க­ளினால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத சீற்­றத்தைத் தூண்டிவிடு­கின்ற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த நிலை­மையை அர­சாங்கம் கண்டும் காணா­த­து­போன்று நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. 

இதனால், மத­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இந்தத் தீவி­ர­மான இன­வாதப் போக்கு, கட்­டுப்­பா­டின்றி வளர்ச்சிப் போக்கில் முன்­னேறத் தொடங்­கி­யி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இந்த முன்­னேற்­றத்தை கண்­டியில் நடை­பெற்ற பொது­ப­ல­சேனா அமைப்பின் மாநாடு சந்­தே­கத்­துக்கு இட­மின்றி வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

சிங்­கள இராஜ்­ஜியப் பிர­க­டனம்

'முழு நாடும் ஓர­ணியில்' (திரள வேண்டும்) என்ற தொனிப்­பொ­ருளில் நடத்­தப்­பட்ட இந்த மாநாட்டில், இலங்­கையில் சிங்­கள இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்க வேண்டும் என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மாநாட்டுத் தீர்­மா­னத்தின் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார். 

சிங்­க­ள­வர்­களும் குறிப்­பாக பௌத்த மதமும் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருப்­ப­த­னா­லேயே சிங்­கள இராஜ்­ஜி­யத்தை உரு­வாக்க வேண்டும் என்ற பிர­க­டனம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. பொது­ப­ல­சேனா அமைப்பின் இந்தக் கருத்­துக்குப் பலத்த எதிர்ப்பும் விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள போதிலும், சிறு­பான்மை இன மக்­களை அச்­சு­றுத்­து­கின்ற இந்த பிர­க­டன பிர­சார நட­வ­டிக்­கையை அர­சாங்கம் கருத்­திலும் கவ­னத்­திலும் எடுத்துக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

இந்த நாடு பல்­லின மக்­களும் பல மதங்­களைச் சேர்ந்­த­வர்­களும் வாழ்­கின்ற பல்­லி­னத்­து­வ­மு­டைய ஜன­நா­யக நாடாகக் கரு­தப்­பட்ட போதிலும், சிங்­கள பௌத்த தீவி­ர­வாதப் போக்­கு­டை­ய­வர்கள் இந்த ஜன­நா­யகக் கொள்­கைக்கு எதி­ரா­ன­வர்­க­ளா­கவே செயற்­பட்டு வரு­கின்­றார்கள். இதனால், இன, மத ரீதி­யா­க  சிறு­பான்மை இன, சிறு­பான்மை மதம் சார்ந்த மக்­களின் இருப்­புக்கு ஏற்­பட்­டுள்ள பெரும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. 

இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்டும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் போருக்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது. ஆனால் பொது ­ப­ல­சேனா போன்ற சிங்­கள பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களின் செயற்­பா­டுகள் அதற்கு நேர்­மா­றா­ன­வை­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன. அவை நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­க­ளுக்குக் குந்­த­கத்­தையே விளை­வித்து வரு­கின்­றன. 

சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் இன­வாத, மத­வாதப் போக்­கு­டை­ய­வை­யாக மட்­டு­மல்ல. பொது அமை­திக்குப் பங்கம் விளை­விப்­ப­வை­யா­கவும் இருக்­கின்­றன. கண்­டியில் பொது­பல சேனா அமைப்­பினர் நடத்­திய மாநாட்­டின்­போது, அங்­குள்ள முஸ்­லிம்கள் அச்­சத்தின் பிடியில் சிக்­கி­யி­ருந்­தனர். 

எந்த வேளை­யிலும் அந்த மாநாட்டில் ஒன்று கூடிய ஆயி­ரக்­க­ணக்­கான பௌத்த பிக்­கு­களும் சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களும் தங்கள் மீது தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­து­வி­டு­வார்­களோ என்று அச்­சத்தில் உறைந்­தி­ருந்­தார்கள். இதனால் அன்­றைய தினம் முஸ்லிம் வர்த்­த­கர்கள் தமது வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் அலு­வ­ல­கங்­களைத் திறக்­க­வில்லை. அசம்­பா­வி­தங்கள் ஏதும் இடம்­பெ­றாத போதிலும், இத்­த­கை­யதோர் அச்ச நிலை­மை­யி­லேயே சிங்­கள இராஜ்­ஜி­யத்தைப் பிர­க­டனம் செய்த பொது­பல சேனாவின் மாநாடு நடந்து முடிந்­தி­ருந்­தது. 

அச்சம் நிறைந்த வாழ்க்­கைக்கு வழி­வ­குக்கும்.....

பொது­பல சேனா அமைப்பின் தலை­மை­யி­லான சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களும் பௌத்த பிக்­கு­களும் தாங்கள் விரும்­பிய தரு­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெகுண்­டெ­ழுந்து வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதை வழ­மை­யான நட­வ­டிக்­கை­யா­கவே கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் இந்த நட­வ­டிக்­கைக்கு சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட வேண்­டிய அர­சாங்கம் ஒரு வகையில் சட்ட ரீதி­யான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளதோ என்று சந்­தே­கிக்­கின்ற வகை­யி­லேயே நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. 

ஞான­சார தேரரின் வழியைப் பின்­பற்றி அத்துரலிய ரத்ன தேரரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் துணிந்து இறங்­கி­யி­ருக்­கின்றார். முஸ்லிம் ஆளு­நர்கள் இருவர் மற்றும் அமைச்சர் ஒருவர் உள்­ளிட்­ட­வர்­களை உட­ன­டி­யாகப் பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தைத் தொடங்கி அதில் அவர் வெற்­றியும் பெற்­றி­ருந்தார். 

அவ­ரு­டைய உண்­ணா­வி­ரதப் போராட்ட அழுத்­தத்­துக்குப் பணிந்து அர­சாங்கம் ஆளு­நர்­களைப் பதவி விலகச் செய்­தி­ருந்­தது. ஆனால் அமைச்­சரைப் பதவி நீக்கம் செய்­வ­தற்கு முன்னர் முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் தாங்­க­ளா­கவே தமது பத­வியைத் துறந்­தார்கள். இருப்­பினும் அர­சாங்­கத்தின் மீது தாங்கள் விரும்­பி­ய­வாறு அச்­சு­றுத்தி அல்­லது அழுத்­தத்­திற்கு உட்­ப­டுத்தி காரி­யங்­களை சாதிக்க முடியும் என்ற மனப்­போக்கை – இன­வாத அர­சியல் சார்ந்த துணிவை அர­சாங்­கமே அத்துரலிய ரத்ன தேரர், ஞான­சார தேரர் போன்ற தீவி­ர­வாத பிக்­கு­க­ளுக்கு அளித்­தி­ருக்­கின்­றது. 

உயிர்த்த ஞாயிறுதின தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய; பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய ஆதா­ர­மற்ற விட­யங்­க­ளையே  ரத்ன தேரர் தனது உண்­ணா­வி­ரதப் போராட்ட நிபந்­த­னைக்­காக முன்­வைத்­திருந்தார். ஆனாலும் அந்த குற்­றச்­சாட்டு குறித்து அர­சாங்­கமோ அல்­லது சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்குப் பொறுப்­பான பொலி­ஸாரோ அலட்டிக் கொள்­ள­வில்லை. உண்­மையைக் கண்­ட­றிந்து அதற்­கேற்ற வகையில் அந்த உண்­ணா­வி­ர­தத்தைத் தடுக்­கவும் முற்­ப­ட­வில்லை. 

சிங்­கள பௌத்தர்­க­ளி­னதும், அந்தத் தீவி­ர­வா­தத்­திற்குத் தலைமைதாங்­கியும் துணை­போயும் ஆத­ர­வ­ளிக்­கின்ற பௌத்த பிக்­கு­க­ளி­னதும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உரிய முறையில் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வர வேண்டும். இல்­லையேல், அவர்­களின் கட்­டுக்­க­டங்­காத நட­வ­டிக்­கைகள் சிறு­பான்மை இன மக்­க­ளையும் சிறு­பான்மை மதம் சார்ந்த மக்­க­ளையும் தொடர்ச்­சி­யாக அச்­சத்தின் பிடியில் சிக்கி வாழ்­கின்ற நிலை­மைக்கே இட்டுச் செல்­லு­வதைத் தடுக்க முடி­யாமல் போகும்.   

அர­சியல் அந்­தஸ்து இல்­லாத ஆபத்து 

பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் மாநாட்­டையோ அல்­லது அவர்­களின் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளையோ தீவி­ர­மாகக் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவர்கள் தெருச்­சண்­டித்­தன அர­சி­ய­லி­லேயே ஈடு­ப­டு­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய கருத்­துக்கள் ஒரு­போதும் அர­சியல் நிலைப்­பா­டாக மாறப்­போ­வ­தில்லை என்று ஒரு சாரார் வாதி­டு­கின்­றார்கள். 

பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரும்­சரி அது­போன்ற ஏனைய சிங்­கள பௌத்த மத தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளும்­சரி அர­சியல் ரீதி­யான அந்­தஸ்தைக் கொண்­டவை அல்ல. சிஹல உறு­மய போன்று நாடா­ளு­மன்­றத்தில் இவர்­க­ளுக்குப் பிர­தி­நி­தித்­துவம் கிடை­யாது. அதே­வேளை நாடா­ளு­மன்­றத்தின் ஊடாக காரி­யங்­களைச் சாதிப்பதற்கு அவ­சி­ய­மான கட்சி ரீதி­யான அர­சியல் அந்­தஸ்தும் கிடை­யாது என்று அவர்கள் காரணம் கற்­பிக்­கின்­றார்கள். 

அவர்கள் கூறு­கின்ற கார­ணங்­களை தர்க்­கத்­திற்­காக ஏற்­றுக்­கொண்­டாலும், சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்தை உயிர் மூச்­சாகக் கொண்­டுள்ள மேலாண்மை போக்கைக் கொண்­டுள்ள பேரி­ன­வாத அர­சி­யலில் ஆட்சி அமைக்­கின்ற அர­சியல் சக்­தியைத் தீர்­மா­னிக்­கின்ற வல்­லமை அவர்­க­ளி­டமே இருக்­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது. 

அதே­வேளை, எந்தக் கட்சி ஆட்சி அமைத்­தாலும், அவர்கள் பௌத்த பீடங்­க­ளி­னதும், சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்தைக் கொள்­கை­யாகக் கொண்­டுள்ள பௌத்த பிக்­கு­க­ளி­னதும் விருப்­பத்­திற்கு மாறாகச் செயற்­படத் துணிய மாட்­டார்கள் என்ற அர­சியல் நிதர்­ச­னத்­தையும் மறந்­து­விட முடியாது. 

உண்மையில் பாரம்பரிய ஜனநாயக வழியைப் பின்பற்றுகின்ற நாடாக இலங்கை தொடர்ந்து திகழ வேண்டுமானால், சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதப் போக்கை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். சகல இனங்களும் சகல மதங்களைச் சேர்ந்தவர்களும் அமைதியாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். 

பொதுபலசேனா அமைப்பினரின் எல்லைமீறிய கொள்கைப் பிரகடனமும், செயற்பாடுகளும் நாடு தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகக் களம் இறங்கப் போகின்றார்கள், தேர்தல் வாக்குறுதிகளாக என்னென்ன விடயங்களை முன்வைக்கலாம் என்பது பற்றி அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில் சிங்கள இராஜ்ஜியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற கொள்கைப் பிரகடனங்கள் அவர்களுடைய தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல்களுக்காக எத்தகைய முடிவையும் அல்லது தீர்மானத்தையும் மேற்கொள்ளலாம். ஆனால் பல்லினம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இலங்கை என்ற ஜனநாயக நாட்டின் தலைவிதியைப் பிழையான வழியில் அல்லது தவறான வழியில் நிர்ணயிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக இனவாத, மதவாத போக்குடைய பௌத்த தீவிரவாதிகளின் செயற்பாடுகளுக்கு எல்லையிட்டு கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முன்வர வேண்டும். இதுவே இன்றைய அரசியல் சூழலில் அத்தியாவசியமான தேவை.  

பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04