கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் ஆகியோர் இணைந்து குறித்த இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

 குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பிளச மண்டபத்தில் இடம்பெற்றது. முதல் நாளான இன்று முப்படையினர் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. 

பொதுமக்களிற்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல், சட்டரீதியான சிறந்த சேவையை மக்களிற்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பிலு்ம, புதிதாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது அவர்களிற்கு வழங்கப்பட்டது.

இதேவேளை நாளை 9 மணிமுதல் 5 மணிவரை பொதுமக்கள் தமது பிரச்சினைகளிற்கான இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இரண்டாம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சிரேஸ்ட சட்டத்தரணிகள் பொதுமக்களிற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி, சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளர், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.