ஜா - எல ஏக்கலப் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜா-எல ஏக்கலப் பகுதியின் துடெல்ல ரயில் நிலையத்திலிருந்து சுமார்  500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதியதிலேயே குறித்த  விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் துடெல்லப் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயட்சிக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காணப்படுவதினாலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள் குறித்த ரயிலை போகவிடாது தடுத்து வைத்துள்ளதோடு குறித்த பாதுகாப்பற்ற கடவைக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து பொலிஸாரும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளும் குறித்த மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரமாக குறித்த ரயிலை தடுத்து வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் நாட்டின் பல பகுதிகளுக்குமான ரயில் சேவை முற்றாகப் பதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பகுதியில் இத்துடன் ஐந்து மரணங்கள் பாதுகாப்பான ரயில் கடவை இல்லாமையினால் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.