(நா.தனுஜா)

எங்களுடைய அரசாங்கத்தில் நாட்டின் கல்வி விருத்தியை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்கப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயார் செய்திருக்கிறார். அதற்கான அனுமதி பெறப்பட்டு, அப்பாடசாலைகளைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அருண் பிரசாத் அறக்கட்டளையின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தினால் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலைக்கான காணி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுதலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் அப்பாடசாலைக்கு வழங்கப்படும் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை அருண் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய அரசாங்கத்தில் நாட்டின் கல்வி விருத்தியை இலக்காகக் கொண்டு பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டிருக்கிறோம். எமது கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஒரு தமிழர். இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து இன,மதம் சார்ந்தவர்களினதும் பல்வகைமைத்தன்மையைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளித்துவருவதற்கான ஒரு உதாரணமாகும். அதேபோன்று இன்றளவில் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள் என்றும், எனவே அவை களையப்பட்டு அந்தப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் என்னிடம் கூறியிருக்கிறார். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.