(இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரையில் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என்று   குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து  ஐக்கிய தேசிய கட்சியினை   பாதுகாத்து  தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கின்றது. 

எதிர் தரப்பினராக  இருந்துக் கொண்டு  கூட்டமைப்பினரும்,  மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுவதை விட  அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்வதே பொருத்தமானதாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர்   செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ்  மக்களின்  அடிப்படை  பிரச்சினைகளுக்கு  அரசாங்கம் இதுவரையில் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை  என்று  குற்றஞ்சாட்டும் கூட்டமைப்பினர் தொடர்ந்து   ஐக்கிய தேசிய கட்சியை   பாதுகாப்பதால் எவ்வித  பயனும் ஏற்படாது. வடக்கு மற்றும் கிழக்கு   பிரதேசங்களில் உள்ள  பிரச்சினைகளுக்கு தீர்வு   காணும் நோக்கம் கூட்டமைப்பினரிடம் கிடையாது. எதிர்க்கட்சியினர் என்று குறிப்பிட்டுக் கொண்டு கடந்த    நான்கு  வரட காலமாக அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்களையும் இவர்கள் பெற்று தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியிக்கு கூட்டமைப்பினரும்,  மக்கள் விடுதலை முன்னணியினரும்  தொடர்ந்து  ஆதரவு வழங்குவது அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாகும். எதிர்க்கட்சியினர் என்று   குறிப்பிட்டுக்  கொள்வதால்  பதவி நிலையின் பொருப்புக்கள் அவமதிக்கப்படுகின்றது. 

ஆகவே  இவ்விரு தரப்பினரும் குறுகிய   காலத்திற்கு  அரசாங்கத்தின்  அமைச்சு பதவிகளை பெற்றுக்   கொண்டு முழுமையாக  அரசாங்கத்திற்கு  சார்பாகவே  செயற்படலாம். அதுவே  சிறப்பாக அமையும் என்றார்.