(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் இன்று மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் அதிகமானவை தரம் குறைந்தவையும் காலாவதியானவையுமாக கண்டறியப்பட்டுள்ளது என ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி சபையில் தெரிவித்தார்.

பத்து கோடி பெறுமதியான காலாவதியான மருந்துகளை கொண்டுவரும் அரசாங்கம் ஐந்து கோடி ரூபா செலவில் மருந்து பரிசோதனை மையம் ஒன்றினை உருவாக்க முடியாதா. மருந்துகளின் தரம், காலாவதி திகதிகளை ஆராய ஒரு நிலையத்தினை உருவாக்க முடியாதா? ஏன் மருந்து நிறுவனங்களின் நலன்களுக்காக மக்களை கொல்கின்றீர்கள்.

இலங்கையில் உள்ள பிரதான வைத்தியசாலைகளை சுற்றியுள்ள மருந்தகங்களில் எத்தனை மருந்தகங்கள் அனுமதிப்பத்திரம் உள்ளது என்றதை தேடித்பாருங்கள். இன்று அரச மருந்தகங்களில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இல்லாதவையாகும்.

சுகாதார அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள 15 அரச மருந்தகங்களில் 12 மருந்தகங்கள் அனுமதிப்பத்திரம் இல்லாதவை. இது அமைச்சருக்கு தெரியுமா. இன்று இலங்கையில் மருந்து மாபியா பரவியுள்ளது. மருந்து நிறுவனங்களின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு பாரிய மருத்துவ மாபியாவையே நடத்தி வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் இன்று மக்களின் சுகாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களை சுகாதார அமைச்சு மேற்கொள்வதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.