நியுசிலாந்துடனான அரையிறுதி தோல்வி இந்திய வீரர்களை  காயப்படுத்துகின்றது,அவர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளனர் ஆனால் அவர்கள் அழவில்லை என இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர்  ரவி சாஸ்திரி இந்தியன் எக்ஸ்பிரசிற்கு  தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை போட்டிக்கு பின்னர் நான் வீரர்களை அழைத்து நீங்கள் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் இருங்கள் என தெரிவித்தேன் என  ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக நீங்களே உலகின் தலைசிறந்த அணியாக விளங்கியிருக்கின்றீர்கள் என்பதை அந்த 30 நிமிடங்களால் மாற்றிவிடமுடியாது என நான் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் ஏனையவர்களின் மதிப்பை பெற்றுள்ளீர்கள் நாங்கள் அனைவரும் காயமடைந்துள்ளதும் ஏமாற்றமடைந்துள்ளதும் உண்மை  ஆனால் கடந்த இரண்டு வருட நீங்கள் சாதித்தது குறித்து பெருமைப்படுங்கள் எனவும் நான் தெரிவித்தேன் என ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

உறுதியாக நிலைத்து நின்று விளையாடக்கூடிய- நாலாவதாக களமிறங்க கூடிய வீரர் ஒருவர் இல்லாதது இந்திய அணியின் நடுவரிசையை பலவீனப்படுத்தியது எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நடுவரிசையி;ல் நிலைத்து நின்று ஆடக்கூடிய வீரர் ஒருவர் தேவைப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்எஸ்டோனியை ஏழாவது வீரராக களமிறக்குவது குறித்து அணியே முடிவெடுத்தது அனைவரும் இணைந்து அந்த முடிவை எடுத்தோம் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

டோனி முன்னதாகவே துடுப்பாட வந்து சிறிது நேரத்திலேயே ஆட்டமிழப்பதை நாங்கள் விரும்பவில்லை அப்படி அவர் ஆட்டமிழந்திருந்தால் நாங்கள் இலக்கை துரத்தமுடியாத நிலையேற்பட்டிருக்கும் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அவருடைய அனுபவம் எங்களிற்கு ஆரம்பத்தில் தேவைப்படவில்லை பின்னைய ஓவர்களிலேயே தேவைப்பட்டது ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் அவர் மிகச்சிறந்தவர் எனவும ; ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

போட்டி இரு நாட்களாக இடம்பெற்றதும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை எங்களிற்கு காணப்பட்ட சாதகதன்மை மறுநாள் இல்லாமல் போய்விட்டது,ஆனால் விளையாட்டுகள் அப்படிப்பட்டவையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவீந்திர ஜடோஜாவையும் பாராட்டியுள்ள ரவிசாஸ்திரி அவர் இயல்பான திறமை கொண்டவர் என வர்ணித்துள்ளார்.

இந்திய வீரர்கள் தோல்வியை எப்படி  கையாள்கின்றனர் என்ற கேள்விக்கு ரவி சாஸ்திரி  தோல்வி அவர்களை காயப்படுத்துகின்றது,அவர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்துள்ளனர் ஆனால் அவர்கள் அழவில்லை என தெரிவித்துள்ளார்.

இது மிகவும் கடினமான ஒரு அணி எங்கள் அணி பந்து வீசிய விதத்தையும் துடுப்பெடுத்தாடிய விதத்தையும் பாருங்கள் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி சில இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அணியை பலப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அணி சரியான பாதையில் உள்ளது அணி வீரர்களிற்கும் இது தெரியும் கடந்த 30 மாதங்களாக மிகவும் கடினமாக விளையாடிய பின்னர் அரையிறுதியில் தோற்பது ஏற்றுக்கொள்வது கசப்பான விடயமே இதன் காரணமாக நாங்கள் அனைவரும் மனமுடைந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.