அமெரிக்காவில் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்துவருதனால் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்படும் போதை பொருள்களை தடுக்க அதிரடி நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகின்றது.

 அந்தவகையில், பாதுகாப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 18 டன் போதைப்பொருள்கள் அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்டது. பிடிக்கப்பட்ட போதை பொருள்கள் கடத்தும் கப்பல்கள் கடற்படை அதிகாரிகளால் நடுக்கடலிலேயே தீவைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கக் கடற்படையின் விமானம் மூலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தொடர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி கடற்படைக்கு சொந்தமான விமானம் சட்டவிரோதமாகப் பயணிக்கும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கண்டது. உடனடியாக அமெரிக்கக் கடற்படைக்கு இந்தத் தகவல் அளிக்கப்பட்டது.

அமெரிக்கக் கடற்படையினர்  சிறிய படகுகளில் அதிவேகமாகப் பயணித்து அந்த நீர்மூழ்கிக் கப்பலைச் சுற்றிவளைத்தனர். இந்தச் சம்பவம் ஹெல்மெட் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இது ஜூன் மாதம் நடந்திருந்தாலும் இந்த அதிரடிக் காட்சிகளை நேற்றுதான் வெளியிட்டு இருந்தது .

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வைரலாகியுள்ளது.

சுமார் 40 அடி நீளம் கொண்ட படகை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் டன் கணக்கில் போதை பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பெரும்பாலும் கடல் மார்க்கமாகவே கடத்தப்படும் போதை பொருள்களை தடுப்பது என்பது கடும் சிரமமான விடயம். ஆனால் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள்கள் சிக்கி இருப்பது அமெரிக்க வரலாற்றில் முக்கியமானது என்கின்றனர் அதிகாரிகள். கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் 232 மில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo credit :Unitred States Coast Guard