தமிழகத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது உறுதி என்று பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருவாரூரில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“ மேகேதாட்டுவில் கர்நாடக அணை கட்டும் விவகாரத்தில் காவிரி ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒற்றை தீர்ப்பாயம் நல்ல தீர்வாக அமையும். இதனால் காவிரி ஆணையத்திற்கு எந்த பாதிப்பும் வராது. மாறாக அதன் பலம் பெருகும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து குழப்பமான மனநிலையில் விவசாயிகளும், பொதுமக்களும் உள்ளனர். சுற்றுச் சூழலியல் செயல்பாட்டாளர்கள் என்ற போர்வையில் மக்களை சிலர் குழப்புகின்றனர். எனவே ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள். நிபுணர்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தி, மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும்.

2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். வாய்மொழியாக வங்கிகளுக்கு அறிவுறுத்தி நீரவ் மோடி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுக்க வைத்தார்.

கடனை வாங்கிக் கொண்டு பெருந்தொழிலதிபர்கள் வெளிநாட்டிற்கு  தப்பி செல்ல ப. சிதம்பரம் தான் காரணம். பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாட்டில் 33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஒரு இலட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த சாதனைகளை படைத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசை தான் சிதம்பரம் விமர்சிக்கிறார். இவர் போன்றவர்களுக்கெல்லாம் நீதிமன்றம் எதிர்காலத்தில் பதில் சொல்லும். தமிழகத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது உறுதி” என்றார்.