விஜயகாந்தின் இளைய வாரிசான நடிகர் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘மித்ரன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது இதனை முன்னணி இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் அறிமுகப்படுத்தினார்.

கெப்டன் விஜயகாந்த் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திர நடிகர். இவரது இளைய வாரிசான சண்முகப்பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும், ‘மதுர வீரன்’ என்ற படத்திலும் நடித்தார். இதில் ‘மதுர வீரன்’ என்ற படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. சிறிது காலம் தன்னுடைய தந்தையின் உடல் நிலையை கவனிப்பதற்காகவும், தன்னை நடிகராக தகுதிப் படுத்திக் கொள்வதற்காகவும் பயிற்சியையும் ஓய்வையும் ஒருசேர மேற்கொண்ட சண்முக பாண்டியன், தற்போது அறிமுக இயக்குனர் பூபாலன் இயக்கத்தில் ‘மித்ரன்’ படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரோனிகா சிங் என்ற பொலிவூட் நடிகை அறிமுகமாகிறார். இவ்விருவர்களுடன் யோகி பாபு, தம்பி ராமையா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அருண்ராஜ் இசையமைக்க, பாடல்களை மதன் கார்க்கி எழுத,  எடிட்டர் ரூபன் படத்தைத் தொகுக்கிறார்.

இந்தப் படத்தில் சண்முக பாண்டியன் பொலிஸ் அதிகாரியாக நடித்தாலும், காக்கி சட்டை அணியாமல், கோட் சூட் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் கம்பீரமாக நடிப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.