அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கான எதிர்ப்புகள் அதிகரிப்பதை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது , இந்த உடன்படிக்கை காரணமாக இந்தியாவின் தென்பகுதியில் அமெரிக்க இராணுவதளமொன்று ஏற்படுத்தப்படலாம் எனஇந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கை எடுக்கும் முடிவை மதிக்கும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயத்தில் புதுடில்லி கொழும்பின் முடிவை மதிக்கும் என தனது பெயர் வெளியிடப்படுவதை விரும்பாத இந்திய அரசாங்க வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள இணையத்தளம் சோபா விவகாரம் எங்கள் அயல் சம்மந்தப்பட்டதாலும் இந்தியாவிற்கு இதில் மூலோபாய நலன்கள் உள்ளதாலும் நாங்கள் இதனை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இறைமையை மீறும் விதத்தில் தனது நாடு எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடாது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதை இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை பிரதமருடன் அரசியல் மோதல்களில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கையின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளதையும் இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.