தமிழகத்தில் ஹிந்துத்துவா படையெடுப்பை முறியடிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

“தி.மு.க பிரதிநிதிகளாக சண்முகம், வில்சன் ஆகிய இருவரும், ம.தி.மு.க சார்பில் நானும் மாநிலங்களவைக்கு தெரிவான சான்றிதழை சட்டப்பேரவை செயலாளரிடம் பெற்றிருக்கிறோம். 

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் பெரியார் திடலுக்கு சென்று விட்டு, அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு செல்கிறோம். அங்கு அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு, உறுதிமொழி ஏற்போம். தமிழகத்தை, தமிழினத்தை, தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்திற்கே பேராபத்தாக உருவாகி வருகிற மதசார்பின்மையை இந்துத்துவா சக்திகளின் படையெடுப்பை முறியடிப்பதற்கும்,கூட்டாட்சி தத்துவத்தை வெற்றிபெற செய்வதற்கும் தமிழகத்தின் மீதான ஆக்கிரமிப்புகள் சுற்றுச்சூழலை நாசமாக்குவதில் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுக்கவும் கிடைக்கின்ற வாய்ப்பை நான் பயன்படுத்துவேன். 

அண்ணாவின் குரல் ஒலித்த அவையில், அண்ணாவின் கொள்கைகளையும் அவரின் லட்சிய கனவுகளையும் எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வேன்.” என்றார்.