(இராஜதுரை ஹஷான்)

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குருநாகலை வைத்தியசாலையின்  வைத்தியர் சேகு  சிஹாப்தீன் மொஹமட் ஷர்பி மீது  தாய்மார்கள் முன்வைத்த  குற்றச்சாட்டுக்கள் முறையான விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா என்ற பாரிய சந்தேகம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினர் மீது  எவ்வித நம்பிக்கையும் கிடையாது. ஷாபிக்கு எதிராக தொடர்ந்து சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில்  முறையாக விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் இவ்விடயத்தில் ஒருதலை பட்சமாக செயற்படுகின்றது. ஆகவே  முறையான  அரசியல் தலையீடுகள் இல்லாத  சுயாதீன விசாரணைகள் இடம் பெற  சிறப்பு விசாரணை குழுவை  நியமிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து ஜனாதிபதியிடம்  கோரினோம். ஆனால் அவரும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை.

இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என்று ஒருபோதும்  எதிர்பார்க்க முடியாது. இன்னும் 03 மாத காலமே ஆட்சியாளர்களினால் பதவியில் இருக்க முடியும்.  எமது அரசாங்கமே அடுத்து ஆட்சி பொறுப்பேற்கும் அப்போது பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், அத்துடன்  வைத்தியர் ஷாபியின் சொத்து குவிப்பு தொடர்பிலும் உரிய   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

குருநாகலை  நீதிமன்ற வளாகத்தில் இன்று வியாழக்கிழமை  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.