ஸ்மித்தின் நிதானமான ஆட்டத்தினால் தடுமாறிய அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 223 ஓட்டங்களை குவித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோப்பர் ஆச்சரின் பந்து வீச்சுகளில் அவுஸ்திரேலிய அணியின் முதல் 3 விக்கெட்டுக்களும் 14 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

1.1 ஆவது ஓவரல் ஜேப்பர் ஆச்சரின் வீசிய முதல் பந்தில் பிஞ்ச் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்க 2.4 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் டேவிட் வோர்னர் 9 ஓட்டத்துடனும், அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கோப் 6.1 ஆவது ஓவரில் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இங்கிலாந்து அணி 6.1 ஓவருக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது. எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக அலொக்ஸ்கரி - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து விக்கெட்டுக்களை பறிகொடுக்காது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அதனால் அவுஸ்திரேலிய அணி முதல் 10 ஓவரில் 27 ஓட்டத்தையும், 20 ஓவரில் 78 ஓட்டத்தையும், 25 ஓவரில் 103 ஓட்டத்தையும் பெற்றது. இவர்களின் இந்த இணைப்பாட்டமானது தடுமாறிய அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் உதவியாக அமைந்தது. எனினும் 27.2 ஆவது ஓவரில் அடில் ரஷித்துடைய பந்தில் 46 ஓட்டத்துடன் அலெக்ஸ்கரிஆட்டமிழந்தார் (117-4).

அலெக்ஸ் கரியின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய ஸ்டோனிஸும் அதே ஓவரில் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஜேடி சேர்ந்த ஸ்மித் - மெக்ஸ்வெலின் இணைப்பாட்டமும் அவுஸ்திரேலிய அணிக்கு சற்று கைகொடுத்தது. அதனால் அவுஸ்திரேலிய அணி 34 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 152 ஓட்டங்களை குவித்தது. 

இந் நிலையில் 34.5 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பேட் கம்மின்ஸ் 6 ஓட்டத்துடன் 37.4 ஆவது ஓவரில் ரூட்டிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார் (166-7).

8 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மிட்செல் ஸ்டாக்குடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தாட 40 ஓவரில் 175 ஓட்டத்தையும், 45 ஓவரில் அவுஸ்திரேலிய அணி 206 ஓட்டத்தையும் பெற்றது. ஆடுகளத்தில் ஸ்மித் 82 ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டாக் 22 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இதேவேளை 47.1 ஆவது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக 119 பந்துகள‍ை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க மறுமுணையில் அதே ஓவரின் 2 ஆவது பந்தில் மிட்செல் ஸ்டாக் 29 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வொக்ஸ் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜோப்பர் ஆர்ச்சர் 2 விக்கெட்டுக்களையும் மார்க்வுட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

photo credit : icc