(ஆர்.யசி)

சஹ்ரான் பற்றியோ அல்லது அவருடைய குழுவினர் பற்றியோ தமக்கு எந்தவித தகவல்களும் முன்னர் வழங்கப்பட்டிருக்க வில்லையெனவும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஒரு பயங்கரவாதியை கண்டறிய முடியவில்லை எனவும்  கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார். 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

கேள்வி : காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கருத்துக்களுக்கு அமைய பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு எவ்வித தகவல்களும் தெரியப்படுத்தப்படவில்லையெனக் கூறியிருந்தனர். உங்களுக்கு இதற்கு முன்னர் தெரிந்தததா?

பதில் : இல்லை, எனக்கு எந்தவிடயமும் தெரியப்படுத்தப்படவில்லை.

கேள்வி : 2017 மார்ச் மாதத்திலிருந்து சஹ்ரானுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பதில் : ஆம் திகதி குறிப்பிடப்பட்ட பிடியாணையொன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2017 மார்ச் மாதம் இரண்டு முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையில் குழப்பம் ஏற்பட்டது. இதில் சிலர் கைது செய்யப் பட்டிருந்தனர். இதில் சஹ்ரான் உள்ளிட்ட நால்வர் தப்பியோடியிருந்தனர். அக்காலப் பகுதியில் சஹ்ரான் என்ற நபர் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபராவார். எனது கட்டுப்பாட்டின் கீழ் 42 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. சஹ்ரான் போன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பலர் ஒழித்திருந்தனர். இவர்கள் அனைவரையும் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு நான் வலியுறுத்தியுள்ளேன். பல கூட்டங்களை நடத்தி அதிகாரிகளுடன் நவடிக்கைகளின் முன்னேற்றங்களை அறிந்திருந்தேன். அதுபோன்றே சஹ்ரானின் பிடியாணையும் இருந்தது.

கேள்வி : சஹ்ரானுக்கு எதிரான குற்றச்சாட்டு பாரதூரமாக இருந்தது தானே?

பதில் : இல்லை, இவருக்கு எதிராக அடிப்படைவாத குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை. மாற்று மதக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதாகவே குற்றச்சாட்டு இருந்தது. பயங்கரவாத செயற்பாடுகள் பற்றியோ அல்லது மோசமான செயற்பாடுகள் பற்றியோ அவர் பற்றி எனக்கு அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை. அவர் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்.

 புலனாய்வுத் தரப்பினரை சரியான முறையில் செயற்படுவதற்கு வழிநடத்தியிருந்தபோதும், அவர்களுக்கு உரிய தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. புலனாய்வு பிரிவினருக்கு உரிய தகவல்கள் கிடைக்கவில்லையென்பதைக் கூறமுடியும். நடவடிக்கையில் குறைபாடு இருப்பதாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை. சிவில் பொலிஸ் குழுவின் ஊடாக கூட்டங்களை நடத்துவோம். கிராமங்களைச் சேர்ந்த கல்விமான்களை உள்ளடக்கிய இக்குழுவில் இவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்களையே அதிகம் பேசுவோம். குறிப்பாக தேசிய பாதுகாப்புத் தொடர்பிலேயே கலந்துரையாடுவோம். சஹரானின் பயங்கரவாத செயற்பாடுகள் பற்றியோ அல்லது அடிப்படைவாத செயற்பாடுகள் பற்றியே எமக்கு தகவல்கள் கிடைத்திருக்கவில்லை.

கேள்வி : நீங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் பயங்கரவாதி ஒருவருக்கு அங்கு ஒழித்திருப்பதற்கான சூழல் இருந்துள்ளது. இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் : பெரும்பான்மையான முஸ்லிம்கள் இருப்பதால் அவ்வாறான சூழல் இருந்திருக்கலாம். ஆனால் அப்படி இருந்ததா என்பதை உறுதியாக என்னால் கூறமுடியாது.

கேள்வி : விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இரகசிய தகவல்கள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டதாக நீங்கள் தெரிந்துகொண்டிருந்தீர்களா?

பதில் : இல்லை எனக்கு கிடைக்கவில்லை. 

கேள்வி : இந்தக் கடிதங்களை நீங்கள் எங்கும் பார்த்திருக்கவில்லையா? இதில் உங்களுடைய பதவி குறிப்பிடப்படவில்லையே? தேசிய தௌஹீத் ஜம்ஆத் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இவ்வாறான குழுக்களின் பெயர்கள் முன்னர் கிடைத்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பீர்கள்?

பதில் : தகவல் கிடைத்திருந்தால் தனியான குழுவை அனுப்பி அவர்களை கைதுசெய்ய, தப்பிச் சென்றிருந்தால் அவர்களைத் தேடிப்பிடிக்க நடவடிக்கை எடுத்திருப்பேன்.

 கேள்வி : பெரும்பாலான குழுக்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறான தகவல்களை உங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?

பதில் : உறுதிப்படுத்தப்பட்ட தகவலா இது என்பது எனக்குத் தெரியாது. உறுதிப்படுத்தப்பட்ட தகவலாயின் அதனை அறிவித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க முடியும். 

கேள்வி : வவுனதீவு பொலிஸ் காவலரணில் பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் உங்கள் காலப் பகுதியிலா நடைபெற்றது.

பதில் : ஆம் 

கேள்வி:- இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பிராந்திய பொலிஸார் நடத்தியதா அல்லது சி.ஐ.டியினரா மேற்கொண்டனர்.

பதில் : பகல் நடைபெற்ற சம்பவத்தை மாலை சி.ஐ.டி.யினர் விசாரணைகளைப் பொறுப்பேற்றிருந்தனர்.

கேள்வி : ஏப்ரல் 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் 

பதில் : ஏப்ரல் 17 இரவு 8 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் பொறுப்பதிகாரி நேராகச் சென்று பார்த்துவிட்டு எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார். இதனை பாதுகாத்து மறுநாள் ‘சோகோ’ அதிகாரிகளை அனுப்பி எனக்கு அறிக்கையிடுமாறு கூறினேன்.

வாகனத்தில் ‘ச்செஸி’ நம்பரை கண்டுபிடிக்க முடிந்தது. 18ஆம் திகதி மாலையாகும்போது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்கள் பற்றியும், இந்த மோட்டார் சைக்கிள் பலரிடம் கைமாறப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது. இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கையிட்டதுடன், இது உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்தக் கோப்புக்களை அனுப்புவது அவசியம் எனக் கூறியிருந்தேன். இதற்கு அமையவே கோப்புக்களை பொலிஸ்மா அதிபருக்கு உடனடியாக அனுப்பியிருந்தேன். இது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தபோதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள் வெடித்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசாங்க பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் 23 ஆம் திகதியே வந்தனர்.

கேள்வி : புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமாக அறிக்கையிட்டுள்ளார். அவருக்கு உள்ளடன் தொடர்பு இருந்ததா?

பதில் : நேரடி தொடர்பு இல்லை. பொலிஸ்மா அதிபரின் ஊடாகவே தகவல்களை எமக்கு வழங்குவார்கள்.

கேள்வி :- விசாரணைகளை நீங்களா செய்தீர்கள்

பதில் : ஆரம்ப விசாரணைகளை பொலிஸாரே நடவடிக்கை எடுத்திருந்தனர். ஆரம்ப விசாரணைகளில் கிடைத்த கதவல்களை அடுத்தே அவசரமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய விடயம் என பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்தோம். 

கேள்வி : உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விடயங்கள் எப்படி புலனாய்வு சேவையினருக்குச் சென்றுள்ளது? உங்களுக்கு ஏதாவது தொடர்பு இருந்ததா?

பதில் : இல்லை நேரடி தொடர்பு எதுவும் இருக்கவில்லை. எப்படிச் சென்றது என்று எமக்குத் தெரியாது.

 கேள்வி : காத்தான்குடி பிரதேசத்தில் அரபு எழுத்துக்கள் உள்ளிட்ட அங்குள்ள வடிவமைப்புக்களைப் பார்க்கும்போது நாட்டின் வேறு பகுதியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படவில்லையா?

பதில் : எனக்கு அவ்வாறான நிலைப்பாடொன்று தோன்றவில்லை. நான் நீண்டகாலமாக அந்தப் பகுதியில் பணியாற்றியவன் என்பதால் அவ்வாறான உணர்வு ஏற்படவில்லை. அந்தப் பகுதி அபிவிருத்தியடைவதை பார்க்கும்போது வேறெந்த எண்ணப்பாடுகளும் தோன்றவில்லை. 

கேள்வி : காத்தான்குடியை அடிப்படையாகக் கொண்ட தரப்பினர் பயங்கரவாத செயற்பாடுகள் இருப்பதாக இரகசிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அந்தப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியான உங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இது ஒரு குறைபாடு என நினைக்கின்றீர்களா?

பதில் : அவ்வாறு தகவல் கிடைத்திருக்காவிட்டால் அது குறைபாடாக இருக்கும். எனினும், உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்ததால் எனக்குத் தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

 கேள்வி : ஏப்ரல் 8, 9ஆம் திகதிகளில் பொலிஸ்மா அதிபருடன் கூட்டமொன்று நடைபெற்றதா?

பதில் : எனது நினைவுகளுக்கு அமைய அப்படியான கூட்டமொன்று நடைபெற்றவிருக்கவில்லை. அக்காலப் பகுதியில் ஜனாதிபதி கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவிருந்ததால் பாதுகாப்பு பணிகளில் நான் அங்கு ஈடுபட்டிருந்தேன்.

 கேள்வி : காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சஹரானுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டதாக உங்களுக்கு எதாவது தகவல்கள் கிடைத்ததா?

பதில் : இல்லை. அப்படியிருந்திருந்தால் அது மோசடியான செயற்பாடாக இருக்கும். 

 கேள்வி : வவுனதீவு சம்பவத்தின் பின்னர் விசாரணைகள் பற்றி வேறு தகவல்கள் கிடைக்கவில்லையா?

பதில் : இல்லை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தினர். இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சிவில் பொலிஸ் கூட்டங்களை நடத்தி அங்குள்ளவர்களுக்கு தகவல்களை வழங்கும் பொறுப்பு உள்ளதாகக் கூறியிருந்தேன். மீண்டும் பழைய நிலைக்குச் செல்லக்கூடாது என்பதை அவர்களுக்குக் கூறியிருந்ததுடன், தமிழ் மக்கள் மத்தியில் அச்சமான சூழலொன்று காணப்பட்டது. இந்த நிலைமைய நிவர்த்திசெய்ய வேண்டிய தேவை இருந்தமையாலேயே கூட்டங்களை நடத்தி சகல சமூகத்தினரையும் அறிவுறுத்தியிருந்தேன்.