(நா.தனுஜா)

சிறுபிள்ளைகளைத் தாக்கும் தட்டம்மை நோயை இலங்கை முற்றாக இல்லாதொழித்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது.

இந்த வெற்றி இலங்கையின் திடப்பாடு மற்றும் சுகாதார செயற்திறன் என்பவற்றை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றும் அது தெரிவித்திருக்கிறது.

ஏனைய நாடுகளில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துவரும் நிலையிலேயே இலங்கை அதனை முற்றாக இல்லாதொழித்திருப்பதாக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. 

இது இலங்கையின் திடப்பாடு, சுகாதார செயற்திறன் மற்றும் பிள்ளைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கும் பெற்றோரின் முயற்சி என்பவற்றை வெளிக்காட்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசியப் பிராந்திய பணிப்பாளர் கலாநிதி பூனம் கெட்ராபால் சிங் கூறியிருக்கிறார்.

இலங்கையில் தட்டம்மை முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்பதற்கான தரவுகளை சுயாதீனக்குழுவொன்று பரிசீலனை செய்திருக்கிறது. 

அதன்படி இறுதியாக 2016 மே மாதத்தில் இலங்கையில் சிலர் தட்டம்மை நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இருப்பினும் கடந்த மூன்றாடுகளில் அரிதாகவே காணப்பட்ட இந்நோய்த்தொற்று வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களின் ஊடாகப் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டதுடன், தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டதுடன், அவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

இலங்கையில் சிறுபிள்ளைகளுக்கு ருபெல்லா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை தட்டம்மை நோய் ஒழிப்பில் முக்கிய பங்காற்றியிருப்பதாக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. 

அத்தோடு உள்ளுர் மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தட்டம்மை நோய்த்தொற்றைக் கண்டறிதல், தடுப்பூசி வழங்கல் ஆகியன மேற்கொள்ளப்பட்டமையும் இதற்கு உதவியிருக்கிறது என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது.