மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர்.

 

உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக முட்டி மோதிக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக மக்கள் தொகை தினம்,  ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

1986 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும்  ஜூலை மாதம் 11 ஆம் திகதி உலகமக்கள் தொகை  அனுஷ்டிக்கப்படுகின்றது.

2050 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 10 பில்லியனை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் உலக சனத்தொகை வளர்ச்சிபற்றி பேசிய நாடுகள் இன்று அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளை நடைமுறைப்படுத்துவதைக் கட்டாயமாக்கி உள்ளன. இவற்றுக்குக் காரணம் 2050 களில் உலகம் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களே ஆகும்.

 

உலக சனத்தொகையில் மிகப்பெறிய பகுதி ஆசியாவிற்கானது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 1.327 பில்லியனாக உள்ளது, இது உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 வீதமாகும். அத்துடன்  உலக மக்கள்தொகையில் 30 வீதம் தேவையற்ற மற்றும் தற்செயலான கர்ப்பங்களால் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வளரும் மக்கள்தொகை, அருகிச்செல்லும் இயற்கை வளங்கள், எரிசக்தி மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகியவை 2030 ஆம் ஆண்டில் "பூரணமான புயலை" உருவாக்கும் என்று ஐக்கி இராச்சியத்தின் முதன்மை விஞ்ஞானி எச்சரித்துள்ளார். அவர் தமது பதிவில் உலகின் உணவு கையிருப்பு அடுத்துவரும் 50 வருடங்களுக்கும் போதியதாக இல்லை எனும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் 2030 ஆம் ஆண்டிற்குள்  உலகின் உணவு மற்றும் நீர் தேவை 50 வீத அதிகரிப்பைக் காட்டும் எனக் கூறியுள்ளார். 

இவற்றோடு இன்று சுற்றுச் சூழல் மாசடைவும்  இணைந்துள்ளது. வறுமை, வேலையின்மை, அடிப்படைச்  சுகாதார வசதியின்மை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிமான மக்கள்  தொகைப்பெருக்கத்தின் பக்க விளைவுகளே!

உலகம் 2050 ஆம் ஆண்டுகளில்  2.3 பில்லியின் மக்கள் அதிகரிப்பைச் சந்திக்கும்  அதேவேளை அவர்களுக்கு உணவளிப்பதற்காக 70 வீத உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.

உலகின் ஊட்டச்சத்து பற்றாக்குறையானது 1995 ஆம் ஆண்டில் 832 மில்லியனக இருந்து 2007 ஆம் ஆண்டில் 923 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. அண்மைக்கால மதிப்பீட்டின்படி இந்த தொகையானது, 2009 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கு மேலும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

2009 ஜூன் மாதம் இடம்பெற்ற ஜி.8 நாடுகளின் மாநாட்டின் ஒரு பகுதியான “உலக வருமையும் பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது,

உலகில் ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். உலகில் 6 விநாடிகளுக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கின்றது. ஆபிரிக்க நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர்கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம் என குறிப்பிட்டிருந்தார்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி 700 கோடியைத் தொட்டுவிட்டது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு  எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டத்தினால் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் ஐ.நா. சனத்தொகை நிதியத்தினால் (UNFPA)  இவ்வாண்டின் தொனிப்பொருளாக  “ நிறைவு  செய்யப்படாத வணிக அலுவல்கள் மீது கவனம் செலுத்துதல்” என்பதனை பிரகடனப்படுத்தியுள்ளது. 

சனத்தொகை அதிகரிப்பின் தாக்கமானது ஒரு சிறிய குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாகின்றது. எனவே இதற்கான தீர்வை ஒவ்வொரு நாடும் அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.பல குடும்பங்கள் போதிய வருமானம், வாழ்விட பற்றாக்குறை அடிப்படை தேவைக்குறைப்பாடுகளுடன் வாழ்கின்றனர். இந்த சூழலில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய போதிய அறிவின்மையால் குடும்பத்தைச் சரியான கட்டுக்கோப்பில் பேணுவதற்குத் தவறுகின்றனர். 

இந்தியா போன்ற நாடுகள் தமது வளங்களுக்கும் அதிகமாக சனத்தொகையை கொண்டுள்ளது. எனவே தனிநபரின் தேவைகளை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

இலங்கையை பொருத்தமட்டில் இரு பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். 2018 ஆம்  ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி. இலங்கையின் மக்கள் தொகை 20, 950,041 ஆவதுடன் பிறப்பு விகிதம் 14.8 ஆகவும் இறப்பு விகிதம் 6.3 ஆகவும் காணப்பட்டது.

எதிர்நோக்கவுள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு எதிராகச் செயற்பட தமக்கு தேவையான உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளும் நிலைக்கு மனிதன் மாற வேண்டும். அத்துடன் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சனத்தொகை வளர்ச்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே மனித இனத்தின் நிலவுகையை உலகில் நீடிக்க முடியும்.

- ஜெயந்தி