தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

ஆனால் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விருப்பம் தெரிவிப்பதாக இல்லை என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க  தெரிவித்தார்.

இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார். 

நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையத்தின் பணிகள் பூர்த்தி ஆனதும் இந்தியாவுக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயண செலவு மேலும் குறைவடையும். இதனால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது..