தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்த சரத் மனமேந்தரா மற்றும் சீலரத்தன தேரர் உள்ளிட்ட பலர், சம்பந்தனை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்ததாக கூறி  சம்பவம் தொடர்பில்  தெற்கில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள்  கடந்த வாரம் எதிர்க்கட்சி காரியாலயத்தின் முன் எதிர்ப்பு ஆர்ப்பபாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த நபர்கள் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து எதிர்க் கட்சித் தலைவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


இச் சந்திப்பில் நவ சிஹல உறுமய தலைவர் சரத் மனமேந்திரா, ஜனசென முன்னணியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர், மௌபிம வேனுவென் ரணவிருவோ அமைப்பு, தேசிய விடுதலை மக்கள் முன்னணியினர் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது கருத்துத்தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,


நான் பலவந்தமாக இராணுவ முகாமிற்குள் செல்லவில்லை என்று சுட்டிக்காட்டியதோடு, மக்களின் காணிகளை பலவந்தமாக சுவீகரித்துள்ளதை பார்வையிடவே சென்றேன்.
 
இங்கு கருத்து தெரிவித்த அரசியல் கட்சிகள், வடக்கில் உள்ள இராணுவ முகாம்களில் மக்களின் நிலங்களை சட்டவிரோதமாக கைப்பற்றியிருந்தால் அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதாகவும் மேலும் இதன் உண்மைத் தன்மை பற்றி விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


குறித்த சம்பவத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்படின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாமும் இணைந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க போராடுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்க் கட்சித் தலைவர் என்ற ரீதியில் தென் மாகாணங்களிலும் மக்கள் துயரடைவதாகவும் அவர்கள் மத்தியில் சென்று சந்தித்து  பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.