(செ.தேன்மொழி)

வெலிவேரிய -ரத்துபஸ்வல பகுதியில் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றின் போது ஆர்பாட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிவான் குழு முன்னிலையில் மேற்கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று  கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கம்பாஹ - வெலிவேரிய -ரத்துபஸ்வல பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொழிற்சாலையின் கழிவுகள்  நீர் நிலையங்களில் கலப்பதாக குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டிருந்தனர். 

இதன்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த இராணுவத்தினர் , ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்ததுடன், 40 க்கும் அதிமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது சம்பத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவ அதிகாரிகள் குற்றப் பலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து பிரதிவாதிகளான பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன உட்பட இராணுவ சிப்பாய்கள் நாள்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வந்தன. அதற்கமைய இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிவான் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு நீதியரசரிடம் சட்ட மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.