தளபதி விஜய் நடித்திருக்கும் ‘பிகில்’ படத்துடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘சங்கத் தமிழன்’ படமும் ஒரே நாளில் வெளியாகள்ளன.

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் தயாராகி இருக்கும் பிகில் படம் தீபாவளியன்று வெளியாகிறது. தீபாவளிக்கு நட்சத்திர அந்தஸ்தில் உள்ள விஜய் படம் மட்டுமே வெளியாகும் என்றிருந்த நிலையில் தற்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சங்கத் தமிழன்’ படமும் வெளியாகும் என்று தெரியவருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கிராமப்புறங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நடிப்பில், வாலு மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கொமர்ஷல் எண்டர்டெயின்மெண்ட் படமான ‘சங்கத் தமிழன்’ படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தீபாவளியன்று வெளியாகும் என தயாரிப்பு தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சங்கத்தமிழன் படத்தை பாரம்பரியமிக்க விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி. பாரதி ரெட்டி தயாரித்திருக்கிறார் என்பதும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகைகள் ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள் என்பதும், இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

உலகமெங்கும் ரசிகர்களை வைத்திருக்கும் தளபதியுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படமும் வெளியாகவிருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்திற்கு தல ரசிகர்களின் ஆதரவு மறைமுகமாக இருக்கும் என்று தளபதி ரசிகர்கள் தற்போதே தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.