(நா.தனுஜா)

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக பிரதமருக்கு அழைப்பு விடுத்தால், அவர் சென்று வெளிப்படைத் தன்மையுடன் தானறிந்த தகவல்களை வழங்குவார். 

அதேபோன்று விசாரணைகளுக்காக முன்நிலையாகுமாறு தெரிவுக்குழுவினால் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அவரும் சாட்சியம் வழங்க முன்வர வேண்டும். 

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த உறவுகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க முடியாது. இழப்பீடுகள் வழங்குவதன் மூலம் அவர்களின் இழப்புக்களை முழுமையாக ஈடுசெய்ய முடியாது. 

எனவே இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களை அவர்கள் முன்நிறுத்துவதே தற்போது அவர்களுக்கு நாம் வழங்கக்கூடிய ஒரே ஆறுதலாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாங்கள் ஆட்சி அமைத்த பின்னர் நிலுவையில் இருந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வழக்குகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திருக்கிறது என்று நான் நம்புகின்றேன். என்னுடைய தந்தை கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து மாத்திரம் இதனைக் கூறவில்லை என அவர் இதன் போது தெரிவித்தார்.