ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தின் கீழ், இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு முதல் 'தங்க விசா' வழங்கப்பட்டது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் தொழில் தொடங்க, வெளிநாட்டில் இருந்து வந்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களை கவுரவிக்கும் விதமாக, தங்க விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்சின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள் என அரசால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிலருக்கே இந்த விசா வழங்கப்படும். இந்த விசா பெறுபவர்களும் அவரது குடும்பத்தினரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் நிரந்தரமாக தங்கும் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர். 

இந்நிலையில், எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் வசிப்பவர் லாலு சாமுவேல். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் பல்வேறு தொழில்கள் செய்து வருவதுடன், பல நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார்.

தொழிலதிபர் லாலு சாமுவேலுக்கு, கடந்த 7ம் திகதி முதல் ‘தங்க விசா’ வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட அவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.